சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணத்திற்கு எதிரான இரண்டாவது மக்கள் போராட்டம் (01-06-2012) லண்டனில் இடம்பெற்றது.பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மத்திய லண்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளில் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்ற நபர் பிரித்தானிய மண்ணில் காலடி வைக்க தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் கோபமடைந்த தமிழ் மக்களில் சிலர், தமிழின அழிப்பை மேற்கொண்டு, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி, பௌத்த இனவாதத்தை நிலைநாட்டிவரும் சிறீலங்கா தேசத்தின் தேசியக்கொடியை கொழுத்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நடுவே தமிழ் மக்களின் நிலைப்பாட்டை விளக்கிய மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக கடந்த 26ஆம் நாள் பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த பிரித்தானிய மண்ணில் காலடி வைத்தால். மேலும் பல போராட்டங்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் எச்சரிக்கையையும் மீறி மகிந்த லண்டன் வந்தால், எதிர்வரும் 6ஆம் நாள் மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்துக்கு அருகிலுள்ள மன்சன் கவுசிலும், வானூர்தி நிலையம் உட்பட வேறு பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.