தமிழர் செறிந்து வாழும் தாயகமான வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய முற்படுமானால் பின் விளைவுகள் விபரீதமாக மாறும் என்று நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு
கருணாரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிணங்களை அடக்கும் மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை செப்பி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களுக்கான உரிமைகளைக் கோரிப் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்த அரசாங்கம், தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து விட்டுள்ளதாக விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் திட்டமிட்டு காணிகளை சுவீகரித்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உரிமைகளை ஜனநாயக விழுமியங்களுக்கமையப் பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அதனை இன்னுமொரு தரப்பு தர மறுக்கும் தருணத்தில் வன்முறை மூலமாக அதனை பெறவேண்டும் என்ற நிலைமை ஏற்படுகின்றது.
அதுவே எதிர்காலத்தில் தீவிரவாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல இன்னல்களைச் சந்தித்த பின்னரும் தமிழர்களின் துயரங்கள் அவல நிலைமைகள் தீரவில்லை.
மாறாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயற்பாடுகளையே இந்த மஹிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் நவசமசமாஜ கட்சித் தலைவரும், தெஹிவளை கல்கிசை நகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.