பக்கங்கள்

18 ஜூன் 2012

யாழில் தொடரும் விஷமிகளின் அடாவடி!

newsயாழ்.பிறவுண் வீதி 2ஆம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துவீட்டின் உள்ளே ஒயில் ஊற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது விஷமிகள் குழு ஒன்று. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சி.யோகராசா என்பவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தின் போது அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த புடைவைகளும் பாடசாலை மாணவர்களது பதிவுப் புத்தகங்களும் கழிவு ஒயிலினால் தோய்ந்திருந்தன. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவரே அங்கு தாக்குதல் நடத்தியமை ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மூவரில் ஒருவர் வீட்டுக்கேற்றடியில் இயங்கிய நிலையில் மோட்டார் சைக்கிளுடன் நிற்க மற்றைய இருவரும் உள்ளே சென்று தாம் கொண்டு வந்த தடி ஒன்றினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சுமார் 5 போத்தல்களில் கொண்டு வந்த கழிவு ஒயிலை வீட்டின் ஜன்னலினூடாக உள்ளே ஊற்றியுள்ளனர். ஜன்னல் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டுக்காரர் கூக்குரலிடவே மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. கழிவு ஓயில் ஊற்றப்பட்டதனால் வரவேற்பறை மற்றும் அறை ஒன்றும் அலங்கோலப்படுத்தப்பட்டன. உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் உடுபுடைவைகள், பதிவுப்புத்தகங்கள் மட்டுமன்றி வீட்டின் சுவர்களிலும் ஒயில் ஊற்றப்பட்டிருந்தது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளை யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் ந.ஜெயக்குமாரனின் கந்தர்மடத்திலுள்ள வீடும் இதே பாணியில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தச் சம்பவத்துக்கும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவத்துக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.