யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளர்கள்.
இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்யும் இராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்து வைக்கபற்றிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்ல சொல்கிறார். உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் சாதனை.
இலங்கையில் நிலைமை வழமைக்கு திருப்பிவிட்டது என சொல்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரு வார கால இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பிய மனோ கணேசன் தமது அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் மேலும் தெரிவித்ததாவது:
நாளை என் பிறந்த தினம். பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் நான் இல்லை. கொழும்பில் ஏழை மக்கள் வாழும் ஊரில் போய் சிரமதானம் செய்வோம். அத்துடன் மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவோம். அரசாங்கம் எதுவும் சொல்லலாம். ஆனால் உண்மைகளை உலகிற்கு எடுத்து சொல்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் ஊடகங்களும் பின்னிற்க முடியாது. நெருக்கடிமிக்க வேளையில் உண்மையை பேசுபவன் தான் உண்மை தலைவன். உண்மையை துணிந்து எழுதுபவன்தான் உண்மை ஊடகவியலாளன். நாளைய வரலாறு இதை பதிவு செய்யும்.
கடந்த கால வெள்ளை வேன் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டன. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவது நாடு முழுக்க நடை பெறுகிறது.
இன்று பெருந்தொகையான பெரும்பான்மை இனத்தவர்களும் கடத்தப்படுகின்றார்கள். கடந்த காலங்களில் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்பட்டபோது அவற்றிற்கு எதிராக நாம் போராடினோம். எமது உறவுகள் கடத்தப்பட்ட போது அது எமக்குத்தான்வலித்தது. அன்று நாம் தனித்து நின்று போராடினோம். நாங்கள் பார்க்காத கடத்தல்கள், கைதுகள், வல்லுறவுகள், படுகொலைகளா?
அன்று எம்மை எதிரிகளாய் பார்த்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடத்தல்களை ஆதரித்தவர்கள் கொழும்பில் இருந்தார்கள். அவர்களும் இன்று எம்முடன் கை கோர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இதைதான் காலத்தின் கோலம் என நம் முன்னோர்கள் சொல்வார்கள். இந்நிலையில் அரசாங்கம் மனித உரிமை தொடர்பில் புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க போவதாக இன்று அறிவித்துள்ளது. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமனான வேடிக்கை ஆகும். இந்த மாதிரி எத்தனையோ அரசாங்க மனித உரிமை நிறுவனங்களை நாம் பார்த்துகளைத்துவிட்டோம்.
இன்று எல்லா மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நாம் எவருடனும் இணைந்து போராட தயார். ஆனால் எம்மவர் பிரச்சனைகளையும் சேர்த்து போராட பெரும்பான்மை கட்சிகள் தயாராக வேண்டும். இது எமது நிபந்தனை. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் இனி சும்மா கூலிக்கு மாரடிக்க கூடாது. எமது வலியை புரிந்துகொள்ள முடியாதவர்களுடன் கைகுலுக்க நாம் தயாரில்லை. புதிய வருடத்தில் இந்த புதிய அடிப்படைகளில் ஒரு புதிய தேசிய அரசியல் கூட்டணியை நாம் உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.