போர்க்குற்றங்களிற்கு எதிராக நட்டஈடு கோரி அமெரிக்காவின் வொசிங்ரன் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்பில் பதில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் நாள் இந்த மனு வை சிறிலங்கா அதிபரின் சார்பில் Patton Boggs என்ற சட்ட அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
முன்னதாக சிறிலங்கா அதிபர் அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்க மறுத்திருந்தார்.
இதையடுத்து, வாதிகளான மனோகரன் மற்றும் ஏனையோரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நீதிமன்ற அழைப்பாணையை வெளியீடுகள் மூலமோ மாற்றுவழியிலோ வழங்குவதற்கு அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அழைப்பாணை தமிழ்நெற் இணையத்தளம் மூலமும், சிறிலங்காவில் அதிகம் விற்பனையாகும் இரண்டு நாளிதழ்கள் மூலமும் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நீதிபதி கொலின் கொலர்-கொற்றெலி தெரிவித்தார்.
இந்தநிலையிலேயே, கடந்த 16ம்நாள் ராஜபக்சவின் சார்பில் Patton Boggs நிறுவனத்தினால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அழைப்பாணையை ராஜபக்சவின் சட்டவாளர்கள் ஏற்றுக் கொண்டு அதுதொடர்பாக தமது மனுவை முன்வைத்துள்ளதானது மிக முக்கிய விடயம் என்று நட்டஈடு கோரி ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கைத் தாக்கல் செய்திருந்தவர்களின் சட்டவாளரான புறூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் நாள் சிறிலங்கா அதிபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்ற வழக்குத் தொடர்பாகத் தனது கருத்தை வெளிப்படுத்தும் வரை, அழைப்பாணைக்குப் பதில் வழங்குவதற்கான காலக்கெடுவை 20 வேலை நாட்களுக்குப் பிற்போடுமாறு கேட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சட்ட ரீதியான அபிப்பிராயங்களுக்கு அமைவாகச் செயற்படாவிட்டால், இந்த விடயம் மிகத் தீவிரமாக ஆராயப்படும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் அமெரிக்க இராஜாங்கச் திணைக்களம் சாதகமான பதிலை எடுக்க வேண்டும் என்று ராஜபக்ச தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Patton Boggs இன் விநோதா பஸ்நாயக்கே, சிறிலங்கா அதிபரின் மைத்துனரும், அமெரிக்காவில் உள்ள சிறிலங்காத் தூதுவருமான ஜாலியா விக்கிரமசூரியவுடன் தொடர்பைப் பேணுபவர் ஆவார்.
இந்தச்சட்ட அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள சிறிலங்கர்கள் பெருமளவிலான நிதியை கட்டணமாக வழங்கி வருகின்றனர்.
அதேவேளை, அமெரிக்க அரசாங்கம் மற்றும் வொசிங்ரனிலுள்ள அதிகாரம்மிக்க ஏனைய அமைப்புக்களுடன் தாம் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதாகவும், தனது பங்காளிகள் அமெரிக்க அரசியலில் ஈடுபட்டுள்ள இரு பிரதான கட்சிகளுடனும் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் Patton Boggs தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.