2009இல் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை மக்கள் சென்றுவர அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக் கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் யஹாவிட் கூறியுள்ளார்.
அந்தப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நிலக்கண்ணிகள் இருப்பதன் காரணமாக அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.
இந்தப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை என்பது இன்னமும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.
ஆட்கள் செல்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாத பகுதிகளின் எல்லைகள்வரை செல்வதற்கு சோசலிச யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பகுதிகளில்தான் போர்க் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவர்கள் மீது விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை அரசாங்க படைகளின் குண்டு தாக்குதலும் நடத்தப்பட நேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போதைக்கு அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர அனுமதிக்கப்படுவார்களா என்று தெரியவில்லை. அந்தப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் எல்லாம் ஒருவிதமான அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்படுகிறது என அங்கு சென்று வந்த, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற றிச்சர்ட் யஹாவிட் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தப் பகுதிகளில் சில இடங்களில் நிலக்கண்ணிகள் இருப்பதனாலேயே மக்கள் இன்னமும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கு சடலங்களோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது என்றும் பாதுகாப்புத்துறை பேச்சாளரான கெஹகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து குறித்து மிகுந்த ஆச்சரியம் வெளியிட்டுள்ள ரம்புக்வெல, இதுவரை காலமும் போரு க்கு பின்னர் எவரும் நிலக்கண்ணிகளால் இறக்கவில்லையென்றும், அங்கு மக்களை அனுப்புவது ஆபத்து என்றும் கூறினார். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அரசாங்கம் வேறு புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் கடலில் இருந்து இந்தப் புதிய இடம் மிகவும் தொலைவில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இராணுவம் பொதுவாக நன்றாக நடக்கின்றபோதிலும், வடக்கில் அவர்கள் அளவிற்கதிகமாக இருக்கிறார்கள் என்றும் றிச்சட் யஹாவிட் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.