பக்கங்கள்

04 டிசம்பர் 2011

ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மகிந்த விளக்குவாராம்!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தமாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிறப்பு உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்த உரையின் போது அவர் விளக்குவார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அனைத்துலக சட்டமீறல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றிய அனைத்துலக சமூகத்தின் கவலைகளை, தனது உரையில் சிறிலங்கா அதிபர் கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த உரை இன்னமும் இறுதி செய்யப்படா விட்டாலும், இந்த இரண்டு விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரப்படுகின்ற போதிலும், தற்போது முதலில் அறிக்கையின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடலாம் என்றும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அறிக்கையை சிங்கள மற்றும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் சிறப்புரை தற்போதைய வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 21ம் நாள் முடிவதற்கு முன்பாக இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தஉரையில், பரிந்துரைகள் மற்றும் அது தொடர்பாக சிறிலங்கா அரசு எடுக்கவுள்ள ஆரம்ப நடவடிக்கை குறித்தும் அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் பரிந்துரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதி வழங்குவார்.
இதனிடையே, முன்னதாக. சனல்-4 வெளியிட்ட காணொலிப் பதிவு போலியானது என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியாக மேலும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.