பக்கங்கள்

02 டிசம்பர் 2011

போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்கிறார் கெகலிய!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகளாக இனங்காணப்படுவோர் தண்டிக்கப்படுவார்கள். பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதைப்போன்று சிலர் தண்டிக்கப்படலாம்; சிலர் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், வெளிநாடுகள் இதில் தலையிட்டு தண்டனை வழங்குவதை அரசும், எமது மக்களும் ஏற்கமாட்டோம். ஆனால் போர்க்குற்றம் ஏதும் நிகழவில்லை என்பதே தொடர்ந்தும் அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக்காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“போரை பலர் பல கோணங்களில் பார்க்கலாம். இதிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாம் பல நியாயமான காரணங்களை முன்வைத்தோம். எமது நாடு சுதந்திரமடைந்துள்ளது. எமக்கென்று பலம், அறிவு என்பன உள்ளன. போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதே அரசின் மாறாத கருத்தாகும்.
இதில் இன்றும் மாற்றமில்லை. நடந்து முடிந்த சம்பவங்கள் தொடர்பாக ஆய்வுசெய்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கைப்படி குற்றவாளியாக எவர் இனங்காணப்படுவார்களோ அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்” என்றார் அவர்.
இதேவேளை, குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட சிலருக்குத் தண்டனை வழங்கப்படும் என அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள், அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவ்வாறு சிலருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த விடயத்தில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட்டு, குற்றமிழைத்தோர் என இனங்காணப்பட்டோருக்குத் தண்டனை வழங்குவதை நாமும் ஏற்கமாட்டோம். அதேபோன்று இந்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, போர்க்குற்றம் புரிந்தனர் என இனங்காணப்படும் படையினருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க அரசு முனைந்தால், அதைத் தடுத்து நிறுத்த மக்களைத் திரட்டி வீதியில் இறங்க நேரிடும் என்று பேரினவாத சக்திகள் போர்க்கொடி தூக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.