யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஜேவிபி மாற்றுக்குழுவான மக்கள் போராட்டக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் லலித்குமார் வீரராஜ் கொல்லப்பட்டு விட்டதாக தமக்கு தொலைபேசி மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக, மக்கள் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சமீர கொஸ்வத்த அச்சம் வெளியிட்டுள்ளார்.
“கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடத்தப்பட்ட லலித் குமார் கொல்லப்பட்டு விட்டதாக பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.
அவர் எங்கிருக்கிறார் என்பது எமக்குத் தெரியாது. இந்த தகவல்களை நாம் நம்பவில்லை. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
லலித்குமார் மற்றும் இன்னொரு செயற்பாட்டாளரான முருகநாதன் குகன் ஆகியொர் காணாமற் போயுள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
லலித் குமார் வடக்கில் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைளை நிறுத்துமாறும் இல்லையேல், அவரை அரசியலில் இருந்து அகற்றுவோம் என்றும் அவரது தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
காணாமற்போன லலித் குமார் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மரணஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துக்கும் ஜேவிபிக்கும் தொடர்புகள் இல்லை. இதனைச் செய்வதற்கு அவர்களிடம் வடக்கில் அரசியல் பலம் இல்லை.
இவர்களை விடுதலை செய்யக் கோரி விரைவில் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்.
இதுதொடர்பாக யாழ்.காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குகனின் மனைவி அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்“ என்றும் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் மக்கள் போராட்டக் குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக, அதன் யாழ்ப்பாண அமைப்பாளர் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து உந்துருளி ஒன்றில் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இதன் பின்னர் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
காணாமல் போயுள்ள லலித்குமார் மற்றும் குகன் ஆகியோரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சருக்கும், காவல்துறைமா அதிபருக்கும் தேசிய அமைப்பாளர் அஜித் குமார அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.