பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறதா எனவும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் வாதிகளினால் நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறதா என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா வினவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்களின் வாழ்வியல் எவ்விதம் இருக்கிறது என்பது தொடர்பாகவும் பிரான்ஸ் தூதுவர் கேள்வி எழுப்பினார். அத்தோடு இனங்களுக்கிடையில் எவ்விதமாக புரிந்துணர்வு காணப்படுகிறது எனவும் சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைவு தொடர்பிலும் தன்னிடம் பிரான்ஸ் தூதுவர் கேட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.