சுமார் 50 வரையான தமிழ் அகதிகளை பிரித்தானிய அதிகாரிகள் இன்று தனி விமானம் ஒன்றின் மூலம் சிறிலங்காவுக்கு நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியாவின் ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 50 வரையான அகதிகளுடன் இந்த விமானம் சிறிலங்கா நோக்கிப் புறப்படவுள்ளது. ஆனால் எந்த விமான நிலையத்தில் இவர்களை ஏற்றிய விமானம் புறப்படவுள்ளது என்பதை வெளியிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் இரகசியமாக வைத்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்கா படைகளால் துன்புறுத்தப்படுவதாக புதிய சாட்சியங்கள் கிடைதுள்ள போதிலும் பிரித்தானியாவின் எல்லை முகவரகம் இவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவதாக ‘கார்டியன்‘ குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதத்துக்குப் பின்னர் பிரித்தானியா இரண்டு பெரிய நாடுகடத்தல்களை மேற்கொண்டுள்ளது. கடைசியாக கடந்த செப்ரெம்பர் மாதம் லூற்ரன் விமான நிலையத்தில் இருந்து அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பி அனுப்ப்ப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும் ஆபத்து இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன எச்சரித்துள்ள போதும் இவர்களை நாடு கடத்துவதில் பிரித்தானிய அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும், ‘சித்திரவதையில் இருந்து விடுதலை‘ என்ற லண்டனைத் தளமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனம், சிறிலங்காவில் உள்நாட்டு போர் முடிந்தாலும் இந்த ஆண்டும் அங்கு சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளது.
அண்மையில் இந்த அமைப்பு பிரித்தானிய எல்லை முகவரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா சென்ற றொகான் என்ற தமிழர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சாட்சியங்களை அளித்துள்ளது.
மாணவர் நுழைவிசைவில் பிரித்தானியா சென்றிருந்த றொகான் சுகவீனமுற்ற உறவினரைப் பார்க்க சிறிலங்கா திரும்பிய போது, கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள் மூன்று நாட்கள் தடுத்து வைத்திருந்தனர்.
அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், சூடாக்கப்பட்ட ஊலோகத்தினால் உடலில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டுள்ளார்.
32 வயதான இந்த இளைஞரை சிறிலங்கா குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறி அணுகிய இரண்டு பேர் வாகனம் ஒன்றில் கண்ணைக் கட்டி ஏற்றி சென்று, அடையாளம் தெரியாத இடம ஒன்றில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடைகளைக் களைந்து விட்டு உலோக கம்பியாலும், மரக்கட்டைகளினாலும் தாக்கியுள்ளனர்.“என்று ‘சித்திரவதைகளில் இருந்து விடுதலை‘ அமைப்பு கூறியுள்ளதாக ‘கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.