கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சடலம் ஒன்றுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த 11பேர் காணாமற் போயுள்ளனர்.
இந்திய மருத்துவமனை ஒன்றில் கடந்த 18ம் நாள் மரணமான 38 வயதான தனஞ்சயன் என்பவரின் சடலம், கடந்த 19ம் நாள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டிருந்தது.
அங்கிருந்து வாகனம் ஒன்றின் மூலம் சடலம் யாழ்ப்பாணம், ஏழாலை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில் இறந்தவரின் உறவினர்கள் 11 பேர் பயணம் செய்திருந்தனர்.
கடந்த 20ம் நாள் அதிகாலை 1 மணியளவில் சடலத்துடன் தாங்கள் ஓமந்தைக்கு வந்து விட்டதாக, இறந்தவரின் சகோதரியான கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனை மருத்துவர் விமலச்சந்திரா குமுதா தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
பின்னர் காலை 11 மணியளவில் பனிக்கன்குளத்தில் நிற்பதாகவும், சடலத்தை எடுத்து வந்த வாகனத்தின் சக்கரங்களின் காற்றுப் போய்விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
மீண்டும் மாலை 5 மணியளவில் வாகனம் இயங்கவில்லை என்றும் திருத்தியதும் புறப்படுவதாக கூறியிருந்தார்.
எனினும் இரவு வரை சடலமோ அதனுடன் பயணம் செய்தவர்களோ ஏழாலைக்கு வந்து சேரவில்லை. அவர்களுடனான தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 21ம் நாள் காலை தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச் சென்று காட்டில் வைத்திருப்பதாக உறவினர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததுடன், தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பணியகத்திலும், புளியங்குளம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவி, மூன்று பிள்ளைகள், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் நிகொட் திட்ட அதிகாரி நிரஞ்சன் மற்றும் அவரது மனைவி, அவர்களின் மூன்று பிள்ளைகள், சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களுடன் வாகனத்தின் சாரதியும் காணாமற் போயுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.