பக்கங்கள்

25 டிசம்பர் 2011

படையதிகாரி தப்பிச்சென்றதை ஒப்புக்கொள்கிறது ஸ்ரீலங்கா!

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் அளித்துள்ள சாட்சியம் 'அற்பத்தனமான' நோக்கம் கொண்டது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
"அந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டவர்.
அவரது கவலைகள் என்னவென்று நாம் அறிவோம். அவரது நோக்கம் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவது தான்.
அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், எமது கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்." என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார்.
எனினும் அந்த மேஜர் ஜெனரலின் பெயரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி வெளியிடவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளைக் கொன்று விடும் படி கோத்தாபய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக, அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல் சாட்சியம் அளித்துள்ளதாக பிரித்தானியாவின் 'ரெலிகிராப்' நாளேடு கடந்தவாரம் தகவல் வெளியிட்டிருந்தது.
முன்னதாக இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானபோது, 58வது டிவிசனைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் எவரும் படையை விட்டு விலகி வெளிநாட்டில் தஞ்சமடையவில்லை என்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித்தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.