நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
17 டிசம்பர் 2011
சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தகோ சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. “சிறிலங்காப் படைகளால் புரியப்பட்ட மோசமான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது. மோசமான மீறல்களில் தொடர்புடைய அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை பொறுப்புக் கூறவைப்பதற்கான யதார்த்தமான பாதையை நல்லிணக்க ஆணைக்குழு வழங்கத் தவறிவிட்டது. மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பாக ஒரு பாதையை சுட்டிக்காட்ட ஆணைக்குழு தவறியுள்ளதால், சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அவசியமாகிறது. பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த, பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது நடத்தப்பட்ட ஆட்டிலறித் தாக்குதல்கள் குறித்து எந்தக் குற்ற விசாரணைகளுக்கும் அழைப்பு விட ஆணைக்குழு தவறியுள்ளது. அத்துடன் போர்ச்சட்டங்களை மீறும் வகையில் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது கனரக ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது குறித்தும் ஆணைக்குழு ஆய்வு செய்யவில்லை. அரசபடையினர் தொடர்புபட்ட ஐந்து எறிகணைத் தாக்குதல் சம்பவங்களை மட்டும் பட்டியலிட்டுள்ள ஆணைக்குழு அவை குறித்தே மேலதிக விசாரணைகளை நடத்தக் கோரியுள்ளது. போரின் இறுதி நாட்களில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆராயப்படவில்லை. பாலியல் வன்முறைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் கைதிகள் மீதான சித்திரவதை மற்றும் முறையற்றவிதத்தில் நடத்துவது குறித்தும், போரினால் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களை பல மாதங்களாக அடைத்து வைத்தது குறித்தும் இந்த அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை. இதிலிருந்து மோதல்களுடன் தொடர்புபட்ட மீறல்களுக்கு சிறிலங்காவின் உள்ளக நிறுவனங்களின் மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவை வைத்து சிறிலங்கா அரசாங்கம் ஆடிய ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது“ என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.