பக்கங்கள்

06 டிசம்பர் 2011

கிளிநொச்சியில் திருடிய சிங்களவர்களை காக்க தமிழர்களை தாக்கிய சிங்களப்படை.

கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பாரிய பதட்டம் ஏற்பட்டிருக்கின்றது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சிங்களவர்கள் நால்வர் ஐநூறு ரூபா தாள் ஒன்றை வழங்கிவிட்டு தாம் ஆயிரம் ரூபா வழங்கியதாக முரண்டுபிடித்திருக்கின்றனர். இந்த முரண்பாடு அதிகரித்த நிலையில் குறித்த சிங்களவர்கள் மீது விற்பனை நிலையப் பணியாளர்கள் தாக்கியிருக்கின்றனர். சிங்களவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் அவர்கள் நால்வரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்றிருக்கிறார்கள்.
அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் சிங்களவர்களை வெளியே விடுமாறு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து கனரக வாகனங்களில் கொட்டன்களுடன் வந்து இறங்கிய இராணுவத்தினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
கொக்காவில் பகுதியில் கிரவல் மண் ஏற்றுவதற்காக அந்தப் பகுதியில் தரித்திருந்த டிப்பர் வாகனச் சாரதிகள் மீதும் இராணுவம் தாக்குதல் நடத்தியிதாகவும், பத்துக்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினர் ஏற்றிச் சென்றதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்றிச் செல்லப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இது தொடர்பில் தமக்கு உடனடியாகவே மக்களால் அறிவிக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.