பக்கங்கள்

03 டிசம்பர் 2011

சரணடைந்தவர்களை படுகொலை செய்யும் உத்தரவை ஸ்ரீலங்காவின் உயர்பீடம் வழங்கியது!

"சரணடைகின்ற விடுதலைப் புலி உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கான அறிவுறுத்தல்கள், பாதுகாப்புச் செயலரால் களத்தில் நின்றிருந்த கட்டளைத் தளபதி ஒருவருக்கு வழங்கப்பட்டது" எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக இராணுவ அதிகாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உலகளாவிய புலனாய்வு தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் The International என்னும் ஊடகம் தனக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கையியிருந்து வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலைகள் மற்றும் கொலைகள் போன்றவற்றைச் செய்யுமாறு அந்நாட்டின் இராணுவத் தலைமைப்பீடம் கட்டளையிட்டதாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் The International ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் ஒருபகுதியாக வழங்கப்பட்ட வாக்குமூலத்திலேயே குறிப்பிட்ட இராணுவ வீரர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உள்நாட்டுப் போரின் போது பொதுமக்களிற்கு எதிராக குறிப்பிடத்தக்க பல போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனைத் தான் நேரடியாகப் பார்த்தாகவும் பிறிதொரு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதலில் குறிப்பிடப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் மூத்த அதிகார நிலையில் காணப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவக் கட்டமைப்பின் பிரகாரம் உயர்மட்ட கட்டளைப் பீடத்தின் கட்டளைகளை ஏற்று சிறிலங்கா இராணுவ வீரர்களும் யுத்தத்தின் இறுதிப்பகுதியில் செயற்பட்டுள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது இவ் இராணுவ வீரரால் வழங்கப்பட்ட வாக்குமூலமானது, ஐக்கிய நாடுகள் சபை, பிரதான மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் மீறல் காட்சிகளை உள்ளடக்கி சனல் 04 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் என்பனவற்றிற்கு மேலும் வலுச்சேர்ப்பது போல் உள்ளது.
யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சரணடைந்த அல்லது உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ்ப் புலி உறுப்பினர்களை 'நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை நடவடிக்கை' [standard operating procedure] போன்று மேற்கொள்ளப்பட்டதாக வாக்குமூலம் அளித்த குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இதற்கப்பால், நியூயோர்க்கின் பொதுத் துறை அதிகாரி ஒருவரின் முன்னிலையில் சட்டவாளர் ஒருவரால் குறிப்பிட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் எடுக்கப்பட்ட வாக்குமூலத்தின் போது, "சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான கட்டளைகள் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவாலேயே வழங்கப்பட்டன" என அவர் தெரிவித்தார்.
"சரணடைகின்ற விடுதலைப் புலி உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கான அறிவுறுத்தல்கள், பாதுகாப்புச் செயலரால் களத்தில் நின்றிருந்த கட்டளைத் தளபதி ஒருவருக்கு வழங்கப்பட்டது" எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் இவ் இராணுவ அதிகாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"சரணடையும் புலிகளை மிகக் கொடூரமான முறையில் நடாத்துவதற்கான கட்டளை யாருக்கு வழங்கப்பட்டிருக்கும்?" என இத்தகவலை வழங்கியவரிடம் அவரது வாக்குமூலத்தின் போது வினவப்பட்டது. "சிறிலங்கா அதிபரின் அனுமதியுடன் பாதுகாப்புச் செயலராலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்களை கட்டளைத் தளபதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என அவர் பதிலளித்தார்.
கடந்த ஆண்டில் விக்கிலீக்சில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜதந்திரியான பற்றீசியா புற்றேனிசனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பிட்ட களத் தகவலை வழங்கியவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் போல் தெரிகின்றது.
அதாவது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்து போர்க் குற்றங்களுக்கும் நாட்டு மக்களின் மூத்த தலைமைத்துவமே பொறுப்பேற்க வேண்டும் என பற்றீசியா புற்றேனிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
"சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீறல்களையும் அதிபர் ராஜபக்ச, இவருடைய சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா ஆகியோர் உள்ளடங்கலாக அரசபணியாளர் மற்றும் இராணுவ உயர் அதிகார பீடத்திலுள்ளவர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்" என ஜனவரி 15,2010 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அமெரிக்க இராஜதந்திரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும், 'சுதந்திரமான' முறையில் இவற்றில் ஈடுபடுவதற்கு இப்புலி உறுப்பினருக்கு சிறிலங்கா இராணுவத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் தனது சாட்சியத்தை வழங்கிய குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
கேணல் கருணா என நன்கறியப்பட்டவரும் தற்போது சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராகவும் பதவி வகிக்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்கின்ற முன்னாள் புலி உறுப்பினரே இவ்வாறான படுகொலைகளுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பின் உள் முரண்பாடு காரணமாக 2004ல் கருணா குழு அவ்வமைப்பிலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் உதவியுடன் தனது முன்னாள் அமைப்பினருடன் கருணா குழு யுத்தத்தில் ஈடுபட்டது.
விக்கிலீஸ்சில் வெளியிடப்பட்ட, மே 17,2007 திகதியிடப்பட்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில், "விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிவதில் சிறிலங்காப் படைகளுக்கு கருணா குழு உதவியுள்ளமை, புலிச் சந்தேகநபர்களை ஆட்கடத்தல் செய்வதிலும் இக்குழு உதவியுள்ளமை" தொடர்பான அமெரிக்காவின் அபிப்பிராயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
நம்பிக்கைக்குரிய சில தூதரங்களின் தொடர்புகள் அதாவது உச்ச ஆபத்துக்களை எதிர்நோக்கிய வண்ணம் இவர்களால் வழங்கப்பட்ட தகவல்களில் ஆயுதக் குழுக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருந்த ஈடுபாடுகள் தொடர்பாகவும் தெரியப்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராஜதந்திரியால் எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் ஆட்களைக் கடத்துவதற்காக 'வெள்ளை வான்கள்' பயன்படுத்தப்பட்டதையும், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை நேரில் பார்த்ததாக சாட்சியமளித்த குறித்த நபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பகமான போர்க் குற்றச்சாட்டுக்களில் வெள்ளை வான் கடத்தல் குற்றச்சாட்டும் பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பாதுகாப்புச் செயலரால் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சில கொலைச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட 'சிறந்த அணியாலேயே' வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட நபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சவிற்கு முன்னர் பதவியிலிருந்தவர் இவ்வாறான 'சிறந்த அணியைக்' கொண்டிருந்ததாரா என வாக்குமூலம் அளித்தவரிடம் சட்டவாளர் வினவியபோது, "இல்லை. இது புதிய விடயம். அதாவது தற்போது பதவியிலுள்ள அமைச்சர் 2005ல் நியமிக்கப்பட்டதிலிருந்தே இவ்வாறானதொரு அணி உருவாக்கப்பட்டது" என அவர் பதிலளித்தார்.
புலிகளின் தலைவராகச் செயற்பட்ட வே.பிரபாகரனின் 12 வயது மகன் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக குறித்த வட்டாரம் குற்றம் சாட்டியுள்ளது.
"பிரபாகரனின் மகன் மூலம் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்பதை அவர்கள் கண்டறிந்த செய்தியை நான் அறிந்து கொண்டேன். பின்னர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியையும் அறிந்து கொண்டேன்" என வாக்குமூலம் அளித்த குறித்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 2009ல் வெளியாகிய சண்டே லீடர் பத்திரிகையில் வெளியாகிய ஆசிரியர் பத்தியில், தனது சாவு அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது என முற்கூட்டியே எதிர்வு கூறியிருந்த லசந்த விக்கிரமதுங்க உள்ளடங்கலாக அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர்கள் பலரின் கொலைக்கு அல்லது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக தான் விழிப்புடன் இருந்ததாகவும், சிறிலங்கா இராணுவப் படையின் முன்னாள் இராணுவ அதிகாரி தனது வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
"இறுதியில் நான் கொல்லப்படுவதாயின், என்னைக் கொன்றது சிறிலங்கா அரசாங்கமாகவே இருக்கும்" என தான் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் திரு.விக்கிரமதுங்க, சிறிலங்கா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் "எனது சாவிற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரைக் கூறுவதற்கான தைரியத்தைக் கொண்டிருக்கவில்லை. எனது வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களது வாழ்க்கையும் இதன் மீதே தங்கியுள்ளது" என விக்கிரமதுங்க, அதிபருக்கு எழுதிய மடலில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மிகப் பிரதானமான சிறிலங்கா அமைச்சரே இக்கொலைக்குப் பொறுப்பாளியாக இருப்பதாக வாக்குமூலம் வழங்கியுள்ள குறித்த நபர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் இதற்கான அனுமதி சிறிலங்கா அதிபராலேயே வழங்கப்பட்டது எனத் தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"இவ்வாறான செயற்பாடுகளுக்கான அனுமதி அல்லது உத்தரவு நாட்டின் உயர் பீடத்திலிருந்தே கிடைக்கப் பெறுகின்றது.....உண்மையில் இவற்றிற்கு அதிபரே பொறுப்பாளியாவார்" என வாக்குமூலம் அளித்த குறித்த நபர் தனது சட்டவாளரிடம் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய படுகொலைச் சம்பவங்களுக்கு பாதுகாப்புச் செயலர் அல்லது நாட்டின் அதிபரே பொறுப்பாளிகளாக அல்லது அவற்றை மேற்கொள்வதற்கான கட்டளைகளைப் பிறப்பித்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா விதிமுறைகளின் பிரகாரம் மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றமிழைத்ததற்கான தண்டனைகள் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் அண்மையில் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் ஒளிபரப்பப்பட்ட மனிதப் படுகொலைக் காட்சிகளை உள்ளடக்கிய காணொலிகள் 'உண்மையானவை' என மனிதப் படுகொலை மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான சித்திரவதைகள் போன்றவற்றை அறிக்கையிடும் சிறப்பு அதிகாரியான பிலிப் அல்ஸ்றன் தெரிவித்திருந்தார். "இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
சரணடையும் விடுதலைப் புலிகளைக் கொலை செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டமையானது, இவ்வாண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட சனல் 04 தொலைக்காட்சிச் சேவையின் ஆவணப்படத்தில் காணபிக்கப்படும் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஏனைய மீறல்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆம். எல்லோரையும் கொலை செய்யும்படி எமது தளபதி எமக்குக் கட்டளையிட்டார். நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" என பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"எல்லோரையும் படுகொலை செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. .... உண்மையில், உயர் மட்டத்திலிருந்தே இவ்வாறான கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதென்பது தெட்டத் தெளிவானதாகும்" என பிறிதொருவர் தெரிவித்துள்ளார்.
The International ஊடகத்தால் பெறப்பட்ட இரண்டாவது அறிக்கையில், சிறிலங்கா இராணுவப் படைகள் யுத்தக் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக பொதுமகன் ஒருவரின் சாட்சியம் உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது சொந்தப் பாதுகாப்பிற்காக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத குறித்த பொதுமகன், "சிறிலங்கா இராணுவத்தினர் நேரடியாகப் பொதுமக்களையும் பொதுமக்களின் கட்டமைப்புக்களையும் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. அதாவது பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உட்பட பல தாக்குதல்களை மேற்கொண்டன. மார்ச் 2009ல் மாத்தளன் வைத்தியசாலை மீதான குண்டுத்தாக்குதல், சுதந்திரபுரத்தில் ஜனவரி 2009 ல் ஐ.நா உணவு வழங்கல் மையம் மீதான அரசாங்கப் படைகளின் தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ் உணவு வழங்கல் மையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறார்கள், கர்ப்பிணித் தாய்மார், மற்றும் ஏனைய தாய்மார்கள் பலர் கொல்லப்பட்டனர். மார்ச் 2009ல் இரட்டை வாய்க்காலில் அமைந்திருந்த தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல்கள் போன்றவற்றை நான் நேரடியாகப் பார்த்துள்ளேன்" எனவும் சாட்சியமளித்த அப்பொதுமகன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் இறந்த உடலம் கண்டெடுக்கப்பட்ட சிறிலங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள நந்திக் கடல்நீரேரிக்கு அருகில் பயங்கரமான பல சித்திரவதைகள் அரங்கேற்றப்பட்டதாக குறித்த பொதுமகன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நந்திக் கடல்நீரேரியைச் சூழ்ந்திருந்த பகுதி மக்களால் நிரம்பியிருந்ததாகவும், "தமிழ்ப் புலிகளின் யுத்த முன்னரங்குகளை நோக்கி சிறிலங்கா இராணுவப் படைகள் முன்னேறிக் கொண்டிருந்ததுடன், மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டன. அத்துடன் தமக்கும் புலிகளுக்கும் இடையில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக சிறிலங்கா இராணுவப் படை பயன்படுத்தியது" எனவும் அப் பொதுமகன் தெரிவித்துள்ளார்.
"அத்துடன் புலிகள், இராணுவத்தை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது, பொதுமக்கள் மீது சிறிலங்காப் படைகள் துப்பாக்கிப் பிரயோகங்களையும், எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டன. இதன் போது பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்" எனவும் அப் பொதுமகன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"வெள்ளைக் கொடிகளுடன் காணப்பட்ட பொதுமக்களும் இராணுவத்தால் மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தப்பட்டனர். குழுக்களாக அணிசேர்ந்த மக்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இராணுவத்தை நோக்கி ஓடிச் சென்ற போது முன்னரங்க நிலைகளை நோக்கி மீண்டும் பொதுமக்களைப் படையினர் ஓடஓட விரட்டினர். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நீதிக்குப் புறம்பாகவே மேற்கொள்ளப்பட்டன. யுத்தப் பாதிப்பிற்குள்ளான குறித்த பிரதேசத்தில் 3000 வரையான இறந்த உடலங்கள் காணப்பட்டன" எனவும் அப் பொதுமகன் தெரிவித்துள்ளார்.
26 ஆண்டுகளாக அதாவது யூலை 1983 ல் ஆரம்பித்து மே 2009 ல் நிறைவுக்கு வந்த சிறிலங்கா இராணுவப் படைகளிற்கும் 'தமிழ்ப் புலிகள்' என அறியப்படும் பிரிவினைவாதிகளிற்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தில் 100,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இரு பெரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது தொடரப்படும் ஐ.நா சபையின் விசாரணை, மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் சிறிலங்காவிற்குள் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணை என்பனவே அவையாகும்.
இவ் நல்லிணக்க ஆணைக்குழுவில் மூத்த அரச நிர்வாக அதிகாரிகள் எட்டுப் பேர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்காவில் ஆட்சியிலிருந்த முன்னைய அரசாங்கத்திலும், ராஜபக்ச அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் பல சட்ட ஆளுமைமிக்க பதவிகளில் அங்கம் வகித்தவர்களாவர்.
இவ் ஆணைக்குழுவானது 2007 தொடக்கம் 2009 வரை சிறிலங்காவின் பொது வழக்கறிஞராகச் செயற்பட்ட திரு.சிற்றா ரன்ஞன் டீ சில்வா வால் தலைமை தாங்கப்படுகின்றது.

(புதினப்பலகை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.