பக்கங்கள்

28 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவில் அர்த்தமுள்ள எந்த நல்லிணக்கமும் காணப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின்போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது குறித்து தாம் பெருமைப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
ஆறு பத்தாண்டுகளைக் கொண்ட ஐ.நா வரலாற்றில், பாதுகாப்புசபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முதல்முறையாக கடந்த ஆண்டு கனடா தோல்வியைச் சந்தித்தது குறித்தும், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் நேற்று கனடிய ஊடகங்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆபிரிக்காவில் ஒரு பாலுறவில் ஈடுபடுவோரின் உரிமைகள் குறித்து பேசாதிருந்திருந்தாலோ, சிறிலங்கா தொடர்பான எமது கவலைகளை வெளிப்படுத்தாமல் மெளனமாக இருந்திருந்தாலோ, ஈரானின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்திருந்தாலோ, ஐ.நா பாதுகாப்புச்சபை உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் எமக்கு வாக்குகள் கிடைத்திருக்கும்.
ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. நாம் எதைப் பற்றியும் வருந்துவதாக நான் நினைக்கவில்லை. எமக்கு எதிராக ஈரான் வாக்களித்திருக்கலாம். வடகொரியாவோ கடாபியோ எமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம்.
அவையனைத்தும் எமக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதுகளாகவே நினைக்கிறேன்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசுக்கு எதிரான கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நாங்கள் திகைப்படைந்துள்ளோம்.
யாராவது ஒருவர் எழுந்து போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை, அர்த்தமுள்ள எந்தவொரு நல்லிணக்கமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூற வேண்டும்.
அது மிகவும் பிரபலமாகாது போகலாம். ஆனால் யாரோ ஒருவர் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். இது மிகவும் முக்கியமானதென்று நான் நினைக்கிறேன்.
புதிதாக வந்த பெருமளவு கனேடியர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக - புலம்பெயர் அரசியல்- நடத்துவதாக விமர்சகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானது.
தேர்தலுக்கு முன்னர் அதை நாங்கள் செய்யவில்லை“ என்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.