விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாச நோர்வேயின் உதவியை நாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் தோற்றுப்போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
1990 ஜுனில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நோர்வேயின் உதவியை பிறேமதாச நாடியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுமாறு சிறிலங்காவில் நீண்டகாலம் வசித்த நோர்வேயின் அரசியல்வாதியான ஆர்னே பியோரொவ்வை, அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் சந்தித்துப் பேசியிருந்தார்.
சிறிலங்கா அதிபர் ஆர்.பிறேமதாசவின் சார்பிலேயே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
போர்க்கைதிகள் தொடர்பாக நோர்வேயின் ஆதரவுடன் ஜெனிவாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் ஒரு இரகசிய சந்திப்பை மேற்கொண்ட போதும், அதில் எதிர்பார்க்கப்பட்ட எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் சிறிலங்காவில் இருந்து இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே சேவையாற்றியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் சந்திரிகா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட போது, கனடா, நெதர்லாந்தை உள்ளடக்கிய போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தலைமையேற்க நோர்வேக்கு அழைப்பு விடுக்கப்பட்டதான- இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவலும்- இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
1995 ஏப்ரலில் இந்தப் போர்நிறுத்தம் முறிந்து போன பின்னரும் சிறிலங்கா அரசின் முக்கிய அதிகாரிகளும், ஆலோசகர்களும் நோர்வேயின் தலையீட்டை வலியுறுத்தி வந்துள்ளனர்.
நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ஜெகான் பெரேரா, ஜி.எல்.பீரிஸ் ஆகியொர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
1999இல் கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக நடத்தப்பட்ட பரஸ்பர கலந்துரையாடலை அடுத்து நோர்வே தெரிவு செய்யப்பட்டது.
ஏற்றுக் கொள்ளத்தக்க மூன்றாவது தரப்புகள் பற்றி விளக்கமளிக்குமாறும், அத்தகைய ஐந்து நாடுகளின் பட்டியலை தயாரித்து வழங்குமாறும், சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளிடம் கேட்டுக் கொண்டார்.
புலிகள் வழங்கிய அந்தப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை தெரிவு செய்தார்.
லக்ஸ்மன் கதிர்காமருடனும், ஜி.எல்.பிரிசுடனும் நோர்வேஜியர்கள் 1999இல் பல இரகசிய சந்திப்புகளை மேற்கொண்டனர். இவற்றில் பெரும்பாலானவை சுவிற்சர்லாந்தில் நடைபெற்றன. சந்திரிகா குமாரதுங்கவுடன் கூட இரகசிய சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, 1990 ஜுன் இரண்டாவது வாரத்தில் போர் வெடித்த பின்னர், நோர்வேயின் தலையீட்டின் கீழ் புலிகளுடன் பேச்சு நடத்தும் எந்த முயற்சியிலும் பிறேமதாச ஈடுபடவில்லை என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘தி ஐலன்ட‘ தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.