பக்கங்கள்

22 நவம்பர் 2011

போராட்டம் வெடித்ததால் மலையாள இயக்குனர் தப்பியோட்டம்!

தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும், அதனால் பல லட்சம் தமிழர்கள் மடிவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி மலையாள இயக்குநர் எடுத்த 'டேம் 999' என்ற படத்தின் பிரஸ்மீட், மதிமுக மற்றும் திரைப்பட இயக்குநர்களின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தால் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டேம்999 என்ற படம் தமிழருக்கு எதிரான கேரளாவின் விஷமப் பிரச்சாரம் என்றும் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் வெளியிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.
இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்
மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.
அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.
போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.
இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே... இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தது சிவசங்கர மேனன், எம்கே நாராயணன் என்ற இரு மலையாளிகள்தான். இப்போது, இங்கே தமிழ்நாட்டிலும் ஒன்றரை லட்சம் பேரை கொல்ல சினி்மா மூலம் திட்டம் போட்டுக் கொடுக்கிறார் இன்னொரு மலையாளி... இதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா...
இந்த படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.
இயக்குநர் ஐந்துகோவிலான் உள்பட சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மதிமுகவினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
பாமக ஆர்ப்பாட்டம்
இதைத் தொடர்ந்து பிரஸ் மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பாமகவினர் வந்து டேம் 999 படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரசாத் லேபுக்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மலையாள இயக்குநர் எஸ்கேப்
இந்தப் போராட்டம் குறித்த தகவல் எட்டியதும் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய குழு, பிரசாத் லேபுக்கு வராமலேயே எஸ்கேப் ஆனது. இதனால் அவர்கள் தங்கியுள்ள விடுதியைத் தேடி புறப்பட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.