பக்கங்கள்

05 நவம்பர் 2011

ஸ்ரீலங்கா சென்று கோத்தபாயவை சந்தித்த அமெரிக்க தளபதி!

அமெரிக்கப் படைகளின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் அடுத்த பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கொனன்ற் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கோண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவத் திட்டங்கள் குறித்தும் அதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் எவ்வாறு உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் பசுபிக் கட்டளைப் பீடத்தில் சிறிலங்கா விவகாரங்களை கையாளும் அதிகாரி லெப்.கேணல் ஜெர்னிகன், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் சூலர், பாதுகாப்புக்கான பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கேர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவினர் நேற்றுமாலை சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கும் சென்றிருந்தனர்.
அங்கு அவர்கள் சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பெரேராவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
எனினும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் கொனன்ற் சிறிலங்காவுக்கு எதற்காக பயணம் மேற்கொண்டார் என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
சீனாவுடன் இணைந்து கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அண்மையில் சிறிலங்கா இணங்கியிருந்த நிலையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் உசாரடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.