பக்கங்கள்

20 நவம்பர் 2011

ஆணைக்குழு அறிக்கையை உள்ளபடியே வெளியிடுவாரா மகிந்த ராஜபக்ஷ?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அவர் முழுமையாக வெளியிடுவாரா என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சந்தேகம் கிளப்பியுள்ளது.
உணர்ச்சிபூர்வமான தகவல்கள் அடங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்த வாரஇதழ் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழில் வெளியான பத்தியின் சிலபகுதிகள்.
“காலியில் கடந்தவாரம் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போது அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக – மனிதஉரிமை விவகாரங்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், நல்லிணக்க முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியது தொடர்பாகவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
சிறிலங்காவுக்கு அமெரிக்கா கண்ணிவெடிகளை அகற்றுதல், கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரழிவுகளுக்காக உதவிகள் போன்ற பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
எவ்வாறாயினும், இந்த ஏற்பாடுகள் மனிதஉரிமைகள் நிலைமையைப் பொறுத்தே அமையும் என்றும் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக மீண்டும் மீண்டும் கூறப்பட்ட அமெரிக்காவின் இந்தடச் செய்தி மிகவும் முக்கியமானது.
அதவும் மனிதஉரிமைகள் பற்றிய விவகாரங்கள் அதிகம் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத கூட்டம் ஒன்றில் தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் கொமன்வெல்த் மாநாட்டுக்காக பேர்த் சென்றிருந்த போது, நாடாளுமன்றத்தின் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடப் போவதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த அறிக்கையை அவர் முழுமையாக கையளிப்பாரா அல்லது முக்கிய விவகாரங்கள் தொடர்பான கண்டறிவுகள் மற்றும் பரிந்துரைகள் பற்றிய சில பகுதிகளை மட்டும் வெளியிடுவாரா என்பது பற்றி இன்னமும் தெளிவாகவில்லை.
உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிடுகையில், அறிக்கையைப் பகுதியாக வெளியிடுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளன.
400 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாது.
அதேவேளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து கேள்வி எழுப்புவதற்கு பல மேற்கு நாடுகள் காத்திருக்கின்றன.
அடுத்த சில வாரங்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வுக்கு பல பணிகள் காத்திருக்கின்றன. நாளை அவர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதன்பின்னர் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அதனை எந்தவகையில் சமர்ப்பிப்பது என்று முடிவு செய்வார்.
மிகமுக்கியமாக, தொடர்நடவடிக்கை குறித்த அவர் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள், தமது இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது குறித்து வெறுப்படைந்துள்ளனர்.
துணைஆயுதப்படைகள் அல்லது ஆயுதக்குழுக்களின் ஆயுதக்களைவு பற்றி விவகாரமும் இதில் ஒன்று.
இந்தப் பரிந்துரை தனியே யாழ்ப்பாணத்தில் செயற்படும் டக்ளஸ் தேவானந்தாவின் குழுவை மட்டும் குறியாகக் கொண்டதல்ல. சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதங்களைக் கொண்டுள்ள எல்லா தரப்பினையும் நோக்கமாக கொண்டது.
இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியிருந்தால், கொலன்னாவவில் கடந்தமாதம் 8ம் நாள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்காது என்று ஆணைக்குழுவுடன் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.“

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.