ஜப்பானின் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தச் சந்திப்பு கொழும்பு ஹில்டன் விடுதியில் இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, வடக்கு,கிழக்கில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள், அரசியல்தீர்வு விடயத்தில் கடைப்பிடிக்கப்படும் இழுத்தடிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து தாம் சிறிலங்கா அரச பிரதிநிதிகள், அதிகாரிகளைச் சந்திக்கின்ற போது கலந்துரையாடுவதாக யசூசி அகாசி தம்மிடம் வாக்குறுதி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும், இதன் மூலவே சிறிலங்காவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்றும் அகாசி கூறியதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அகாசி சந்தித்துள்ளார்.
அவர் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ரோக்கியோ புறப்பட்டு செல்லவுள்ளார்.
இந்தநிலையில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து தாம் சிறிலங்கா அரச பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற போது கலந்துரையாடுவதாக அகாசி கொடுத்துள்ள வாக்குறுதி பற்றிக் கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.