பக்கங்கள்

19 நவம்பர் 2011

லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய தேர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது!

பிரித்தானியத் தலைநகர் லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, சித்திரத் தேரை தீவைத்து அழித்துள்ளனர்.
இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்த பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் செயற்பட்டு தீயை ஏனய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவிக்கு எரிந்துவிட்டது.
அதே சித்திரத்தேரைத் தற்போது செய்வதாயின் £100,000 ற்கு மேல் செலவாகும் என்று கூறிய இத் சித்திரத்தேரை உருவாக்கிய சிற்பாசிரியார் கலாநிதி ஜெயகாந்தன் சரவணமுத்து அவர்கள் மேலும் கூறுகையில், இத்தேரில் காணப்படும் சிற்பங்களும் அதன் அமைப்பும் பிரத்தியேகமானவை என்றும், அவ்வாறு மீண்டும் உருவாக்கப்படுவது என்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார்.
நான்கு பேர்களால் நடாத்தப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாடுகள் அனைத்தும் துல்லியமாக திருக்கோயில் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. இப்பதிவுகள் அனைத்தும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றம்; கட்டிடத்தில் இருந்து உடனடியாகத் திருக்கோயிலை வெளிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பிற்கமைய, அம்பாளுக்குச் சொந்தக் காணிக்கொள்வனவிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இம்முயற்சிகளுக்கெதிராகச் சிலர் செயற்பட்டும் வருகின்றனர். புதிய காணிக்கான கொள்வனவிற்கு யாரும் நிதியுதவி செய்யக்கூடாது என்ற பரப்புரைகளும் இடம்பெற்றுவருகின்றது.
“அனுக்கிரகம் பெறுவதிற்கு பணம் கொடுத்துதவி கோயில் கட்டுவதால் எந்த நன்மையும் அடையப்போவதில்லை” என்றும் “ கற்களால் ஆலயம் எழுப்பி வணங்க வேண்டுமென எந்த நியதியுமில்லை” போன்ற கருத்துக்களை பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்குப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பிவருகிறார்கள்.
முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று இருக்ககூடாது என்று ஒருசிலர் பிரச்சாரம் செய்து வரும் காலங்களில் சித்திரத்தேர் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் தனியாக வழிபாட்டுத்தலமாக அமையாது இந்நாட்டில் தமிழர்களின் கலாசாரச்சின்னமாகவும், தாயகத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் பணியிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இந்துக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.
இந்துக்களின் நம்பிக்கையை அழிக்கும் முயற்சியிலும் அம்பாளின் சின்னங்களை உதாசீனப்படுத்தி அம்பாளை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய சீற்றத்தில் இருந்து தப்பமுடியாது என்பது நியதி.
பாதுகாப்புப் படையினரின் விசாரனை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் நால்வர் தீவைக்கும் காட்சிகளை மக்கள் பார்வைக்குத் தவிர்க்கப்படுகின்றன.
சிவயோகம்
அறங்காவலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.