கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் இடம்பெறவிருந்த கொள்ளை முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இரவு இந்தப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் மூவர் நுழைந்துள்ளனர். இவர்களின் கைகளில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் காணப்பட்டன. ஆனாலும் வீட்டில் இருந்தவர்கள் துணிவுடன் இவர்களை எதிர்கொண்டதால் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவருக்குத் தலையில் சுத்தியலால் அடிபட்டதால் காயம் ஏற்பட்டது. அவரிடமிருந்த துப்பாக்கியும் வீட்டில் இருந்தவர்களால் கைப்பற்றப்பட்டது. காயமடைந்த நபர் ஒருவாறு தப்பியோடிவிட்டார். பின்னர் இவர் அடுத்த நாள் கிளிநொச்சிப் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கெனச் சென்றபோது தகவல் கிடைத்ததன் பேரில் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடும் நோக்கில் வீட்டில் நுழைந்தவர்கள் சிங்கள மொழியில் பேசிக் கொண்டதாக வீட்டிலுள்ளோர் கூறுகின்றனர். மேலும் கொள்ளையரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டுத் துப்பாக்கியென்றும் தெரியவந்துள்ளது.தற்போது இந்தத் துப்பாக்கி இராணுவத்தினரின் வசம் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.