பக்கங்கள்

06 நவம்பர் 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு சும்மாதானாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகளின் சந்திப்பில் “ஒன்றுமேயில்லை“ என்றும், வெளிநாட்டு விருந்தினர்களுடன் மேற்கொள்ளப்படும் “வழக்கமான சந்திப்புகளில் ஒன்று தான்“ என்றும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதுபோன்ற சந்திப்புக்களை அரசியல்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான தரப்பினருடனும் நடத்துகிறது.“ என்று தமது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ,சிறிலங்காவின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தச் சந்திப்புக்களின் பின்னர் எந்தவொரு அதிகாரபூர்வ செய்திக்குறிப்பையோ அல்லது ஒளிப்படத்தையோ வெளியிடவில்லை.
இந்தப் பயணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தரப்பினரும் பெரியளவில் பரப்புரை செய்திருந்த போதும், சந்திப்பு பற்றிய விபரங்கள் இருளாகவே உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வொசிங்டனின் நன்கு அறியப்பட்ட சுற்றுலா சின்னமான கப்பிற்றல் மண்டபத்துக்கு முன்பாக நின்று எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றையே வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறியுள்ளது.
இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை வொசிங்டனில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட சந்திப்புகள் தொடர்பாக இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார், “நிச்சயமாக அறிவார்“ என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.