பக்கங்கள்

25 நவம்பர் 2011

தமிழர்களின் அவலங்களை சொல்கிறது ஏ.எவ்.பி செய்தி நிறுவனம்.

"எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார்.
இவ்வாறு AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிவருகின்றனர்.
சிறிலங்காவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள காடுகளில் 2009 ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்க் கிளர்ச்சியாளர்களிங்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர்.
யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், தன்னிடம் இருந்த தங்கச் சங்கிலி ஒன்றை விற்றுப் பெற்ற பணத்தை தனது பதின்ம வயது மகனான சிவகஜன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கக் கொடுத்திருந்ததாகவும், இந்தப் பயணத்தின் போது விடைகொடுத்த தனது மகனை இன்னமும் தான் காணவில்லை எனவும் உசாதேவி செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
"எனது மகனைப் பற்றிய எந்தவொரு செய்திகளும் கிடைக்கவில்லை. ...இது எனது இதயத்தில் மிகப் பெரிய இடைவெளியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
சிவகஜன் இறுதியாகத் தனது வீட்டை விட்டுப் புறப்பட்ட வேளையில் உடைகள், மற்றும் தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் அல்ல என்பதை உறுதிப்படுத்தி அடையாளப்படுத்துவதற்கான ஆவணங்கள், பாடசாலை வரவுப் பதிவுகள் போன்றனவற்றை உள்ளடக்கிய பொதி ஒன்றை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார்.
சிவகஜன் சென்ற படகு யாழ்ப்பாணக் கரையை அடைந்த போது வேறு பயணிகளுடன் இவரும் விசாரணைக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை உசா அறிந்துகொண்டுள்ளார். ஆனால் அன்றிலிருந்து சிவகஜன் தொடர்பாக பல அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோதும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
"எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றோம். எனது மகன் தற்போதும் உயிருடனிருக்கிறான் என நான் நான் நம்புகின்றேன். அவன் இறந்திருந்தால், அதனை நாள் உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவ்வாறு பிள்ளைகளைத் தொலைத்த எல்லாக் குடும்பத்தவர்களும் யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்வதற்கு முதலில் தமது பிள்ளைகளிற்கு ஏற்பட்ட நிலையை அறிந்து கொள்ளவேண்டும்" என உசா மேலும் தெரிவித்தார்.
தமது பிள்ளைகள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டு இறுதி யுத்தத்தில் சண்டையிடுமாறு புலிகளால் வற்புறுத்தியிருக்கலாம் என காணாமற்போன பிள்ளைகளின் பெற்றோர் சிலர் அச்சம்கொள்கின்றனர்.
சிலவேளைகளில் தமது பிள்ளைகள் இராணுவ அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தமது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தும் தம்முடன் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருக்கலாம் எனப் பல்வேறு விதமாக காணாமற் போன பிள்ளைகளின் பெற்றோர்கள் சிலர் நம்புகின்றனர்.
சிலவேளைகளில் இவர்கள் இறுதியுத்தம் இடம்பெற்ற போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. அதாவது இறுதி யுத்த காலப்பகுதியில் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும்" என வவுனியாவைத் தளமாகக் கொண்டியங்கும் காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைக் குடும்பங்களுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிவின் ஆலூசகரான பிரிகேடியர் கல்கமுவ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் உதவியுடன் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் திட்டத்தில் தற்போது யுத்தத்தின் இறுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 370 ஆண்பிள்ளைகள் மற்றும் 327 பெண் பிள்ளைகள் தொடர்பாகத் தேடப்பட்டுவருகின்றது.
ஆனால் உண்மையில் காணாமற்போன பிள்ளைகளின் தொகை இதனைவிட மிக அதிகமாக இருக்கும் எனவும் இதனுடன் தொடர்புபட்ட பல சம்பவங்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரிவால் இதுவரை 49 காணாமற்போன பிள்ளைகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களுடன் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புபட்ட நம்பகமான ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையாலேயே இவ்வேலைத்திட்டம் மிக மெதுவாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
"காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சில பிள்ளைகள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம்" என யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு சிறப்புப் பிரதிநிதி சஜி தோமஸ் தெரிவித்துள்ளார். காணாமற் போன சிறுவர்களைத் தேடுவதற்காக நீண்ட காலம் தேவைப்படுவதாகவும், ஏனெனில் இவர்கள் தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ள வேண்டியுள்ளதாகவும் தோமஸ் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளால் முன்னர் நிர்வகிக்கப்பட்ட சிறுவர் விடுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 19 வயதை அண்மித்த கௌசி என்கின்ற பிள்ளையை மீளவும் குடும்பத்துடன் இணைப்பதில் கடினங்கள் உள்ளன. ஏனெனில் இவருக்கு நெருங்கிய எந்தவொரு உறவினரும் இல்லை என்பதாகும்.
"எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார்.
கௌசி போன்று பெற்றோரை இழந்த சிறுவர்கள் விடுதலைப் புலிகளால் 'மூளைச்சலவை' செய்யப்பட்டு யுத்தத்தில் பங்குபற்ற அல்லது தற்கொலைக் குண்டுதாரிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக இந்த இல்லத்தை நடாத்திவரும் அருட்சகோதரி பெற்றில்டா பெர்னாண்டோ தெரிவித்தார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் போன்ற பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குத் தந்தையைப் போல் மட்டுமே செயற்பட்டதாக 19 வயதுடைய இராசகுமார் தெரிவித்தார்.
"மாமா [பிரபாகரன்] யுத்தத்தில் இறந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் நாங்கள் அவரை இழந்தது துரதிஸ்டவசமே" என இராசகுமார் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் பெற்றோரை இழந்து வாழும் இச்சிறார்களின் படங்களைப் பத்திரிகைகளில் பிரசுரித்தபோதும் யாரும் இவர்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
"இச்சிறார்கள் தமது குடும்பத்துடன் இணைய முடியாமல் போகலாம். ஆனால் இவர்கள் கடவுளின் பிள்ளைகள். இவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அத்துடன் இவர்களை விளங்கிக் கொள்ள வேண்டும்" என பெர்னாண்டோ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.