பக்கங்கள்

18 நவம்பர் 2011

தீவக மக்கள் அணிதிரள வேண்டும்.

பண்ணைப் பாலத்தின் திருத்த வேலை குறித்து இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் எதுவும் நடந்த பாடில்லை. மாறாக மாரி காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பண்ணை வீதியின் அவலம் பெரும் மோசமாகிவிட்டது. பயணிக்கவே முடியாது என்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கும் தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குமான பயண சேவை நடை பெறுகின்றது. மாரி காலம் ஆரம்பித்துவிட்டால் பண்ணை வீதியூடான போக்குவரத்து மிகவும் ஆபத்தானதாகி விடும் எச்சரிக்கையை இவ்விடத்தில் ஏற்கெனவே - பல தடவைகள் தெரிவித்திருந்தும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. பக்குவமாக எடுத்துக் கூறியும் உரியவர்கள் பண்ணை வீதியைத் திருத்த நடவடிக்கை எடுக்காத நிலைமையானது வீதி திருத்தும் பணியில் ஊழல் கடுமையாக வேலை செய்கின்றது என்பதை உணர வைக்கின்றது.
இதன் காரணமாகவே அதிகாரிகள் வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள் என அனுமானிப்பதிலும் தவறில்லை. எதுவாயினும் அதிகாரிகளின் மெளனத்திற்காக, பண்ணை வீதி தரக்கூடிய உயிராபத்துக்களை அனுமதிப்பது அபத்தமானது. எனவே இது விடயத்தில் தீவக மக்கள் மற்றும் தீவகப் பொது அமைப்புகள் ஒன்று திரண்டு இரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, பண்ணை வீதியை புனரமைக்கும் ஒப்பந்த நிறுவனம் தனது பணியை தீவிரப்படுத்த அல்லது ஒப்பந்தத்தை முடிபுறுத்த வேண்டும். இரண்டாவது, பண்ணை வீதித் திருத்தத்தை செம்மையாக மேற்பார்வை செய்யாமல் -புனரமைப்புப் பணியை துரிதப்படுத்தாமல் இருந்த உரிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் நிறுத்தவேண்டும்.
இந்த இரண்டு பணிகளையும் தீவக மக்கள் செய்யத் தவறும் பட்சத்தில், பண்ணை வீதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் குன்றுகுழிகளில் விழுந்து எழுந்து பயணம் தொடர்வதையும், சில வேளைகளில் குன்றுகுழிகளில் விழுந்தவர்களின் விழுக்காடு இறுதியானதாகவும் அமைந்து விடுவது தவிர்க்க முடியாமல் போகும். காரைநகர் வீதியை விரைவில் புனரமைக்க முடியுமென்றால், பருத்தித்துறை-வல்லை வீதியை வேகமாக அமைக்க முடியுமென்றால், ஏ-9 வீதியில் ஏகப்பட்ட பணியாளர்கள் நின்று நாளும் பொழுதும் வீதியை விஸ்தரிக்க முடியுமென்றால், பண்ணை வீதிப் புனரமைப்பை மட்டும் ஏன் வேகப்படுத்த முடியாது? தீவக மக்கள் ஓரணியில் திரளாவிட்டால் அடுத்த ஆண்டல்ல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேகதி தான்.
ஆகையால் தீவக மக்கள் திரண்டு சட்டத்திற்கு உட்பட்டவாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது நடந்தால் பண்ணை வீதியில் இறங்கி நடக்க வேண்டிவராது.
நன்றி:வலம்புரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.