பக்கங்கள்

07 நவம்பர் 2011

புலிகளுடனான போருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கி தாம் தவறிழைத்து விட்டதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது ஜே.வி.பி.
புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. தற்போது, கட்சியின் அந்த முடிவுகள் மகா தவறானவை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனோ தனி மனிதர்களுடனோ தேர்தல் கூட்டு ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க நேற்றுக் கொழும்பில் தெரிவித்தார். பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக திஸநாயக்க தொடர்ந்த போதும் இதனை நேற்று அறிவித்தார்.
கட்சியின் தவறுகளுக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பாகக் காணப்பட்ட சமநிலைத் தன்மை, போருக்குத் தமது கட்சி காட்டிய முழுமையான ஆதரவால் சமநிலை இழந்துபோனதாகவும் அவர் குறிப்பிட்டார். அது மிகத் தவறான முடிவு என்று கட்சி இப்போது புரிந்துகொண்டுள்ளது. பொதுவுடமையை (சோஷலிசம்) நோக்கி நாட்டை முறையாக முன்னகர்த்துவதற்கு “சிறிய மறுசீரமைப்பு” நடவடிக்கைகள் அவசியம் என்றும் திஸநாயக்க பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
கட்சியின் தற்போதைய தலைமை கைக்கொண்ட கொள்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் மன்னிப்புக்கோரலும் வெளிவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.