கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த விதவைப் பெண்ணொருவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் (சி.ஐ.டி.) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதையடுத்து அச்சமடைந்துள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கல்முனையைச் சேர்ந்த 45 வயது விதவையான ரட்ணம் பூங்கோதை, அரசாங்கததினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) முன்னிலையில் கூறிய விடயங்கள் தொடர்பாக விரிவான விபரங்களைத் தருமாறு சி.ஐ.டி. கோரியுள்ளது.
ஆரம்பத்தில் அவர் சி.ஐ.டி. தலைமையகத்திலுள்ள நான்காம் மாடிக்கு வருமாறு அழைக்கப்பட்டார். ஆனால் பின்னர் இந்த நேர்காணல் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இத்தகவல் கல்முனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது. இவ்விசாரணை குறித்து பிரதேச செயலாளருக்கு எல்.எல்.ஆர்.சி. அறிவித்தது.
‘என்னை இந்த நேர்காணலில் பங்குபற்றுமாறு எல்.எல்.ஆர்.சி. கூறிள்ளது. எனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக தனியாக இதில் பங்குபற்றுவதற்கு நான் தயங்குகிறேன். எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சாட்சியமளித்த பின் எனக்கு கஷ்டம் கொடுத்தவரக்ள் அங்குள்ளனர்’ என அவர் கூறினார். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அல்லது சடடத்தரணியும் இந்நேர்காணலின்போது இருக்க வேண்டும் என பூங்கோதை விரும்புகிறார்.
2007 ஆம் ஆண்டு பூங்கோதை சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதே வருடம், எல்.ரி.ரி.ஈ.யிடமிருந்து பிரிந்த குழுவின் தலைவர்களில் ஒருவரான இனியபாரதி அப்பெண்ணை கடத்தி இருவாரகாலம் சித்திரவதை செய்தார்.
பின்னர் 2009 அம் ஆண்டு பூங்கோதை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்தபோது பொலிஸார் அவரை கைது செய்து இரு மாதங்களின் பின் சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தனர். அவ்வருடம் ஏப்ரல் மாதம் பூங்கோதையின் சகோதரியான 3 பிள்ளைகளின் தயானா விதவைப்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின் காணாமல் போனார்.
“எனது கணவர் கொல்லப்பட்டார். எனது சகோதரர்கள் இருவர் காணாமல் போயினர். எனது சகோதரி கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். ஆனால் இந்த விடயங்கள்அனைத்தும் 1990களுக்கு முன் நடந்தவையாகும். நான் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் - எனது கைது மற்றும் எனது சகோதரி காணாமல் போனமை- தொடர்பாக மாத்திரமே நீதி கேட்கிறேன்” என பூங்கோதை கூறினார்.
பூங்கோதை கூறுவதன்படி அவர் தமிழ் புலிகளுடன் அல்லது அரசியலில் சம்பந்தப்பட்டவர் அல்லர். ”எமக்கு எதிராக தனிப்பட்ட கோபங்களைக் கொண்ட நபர்கள் சுயலாபங்களுக்காக எமது குடும்பத்தை அழிக்கின்றனர்” என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.