பக்கங்கள்

03 நவம்பர் 2011

பிரான்சில் பருதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின், தாங்கு களமாகவும், இயங்கு சக்தியாகவும் இருப்பது புலம்பெயர் தேசங்களும், அங்கு வாழும் எமது மக்களுமே.எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்ற தரப்பு புலம்பெயர்ந்து வாழும் மக்களே.
தமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்கின்றோமோ அந்தந்த நாடுகளின் ஆதரவைப் பெற்று, எமது மக்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்தவேண்டிய தலையாய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
சனநாயகப் பண்புகளுடன், சட்டவரம்புக்கு உட்பட்டதாக, எமது போராட்ட வழிமுறைகளை வடிவமைத்து, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று, சிங்களப் பெருந்தேசியவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டுள்ள எமது மக்களின் விடுதலைக்கான பெரும் உழைப்பை வழங்க எமது மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறும் என்ற சிங்கள இனவெறியரசின், கனவு சிதைக்கப்பட்டு, பலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான எழுச்சிப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் இந்த மீள் எழுச்சி, சிங்கள தேசத்தை நின்மதி இழக்கச்செய்துள்ளது என்பதை, சிறீலங்கா அரச தரப்பின் அண்மைக்கால கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.இறுதி யுத்தத்தில், தப்பி வெளிநாடுகளுக்குச் சென்ற போராளிகள், புலத்தில் வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், விடுதலைப் பணியாளர்கள் குறித்து, சிறீலங்கா தரப்பு அச்சம் தெரிவித்திருந்ததும், அதனை முறியடிக்க, திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாக பகிரங்கப்படுத்தியிருத்தமையும் இச்சந்தர்ப்பத்தில், நினைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகவே கருதுகின்றோம்.
தமிழ் மக்களிடையே, போராட்டச் செயற்பாடுகளுக்கிடையே, நிறுவனங்கள், அமைப்புக்களிடையே, இயல்பாக எழுகின்ற கருத்து முரண்பாடுகளை, விடுதலையின் எதிரிகளும், சுயநலவாதிகளும், குழப்பவாதிகளும் தமக்குச் சாதகமாகப் பாவிக்கக்கூடிய ஆபத்தை இச்சந்தர்ப்பத்தில், நாம் பொறுப்புடனும் நிதானமாகவும் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும்.
திரு. பருதி மீதான தாக்குதல், தமிழ் மக்களினுடைய விடுதலைப் பணியில், தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. தமிழ் மக்களினதும் விடுதலைச் செயற்பாட்டாளர்களினதும், உளஉறுதியை உடைக்கும் உள்நோக்கம் கொண்டதாக இதனை நாம் நோக்குகின்றோம்.
திரு. பருதி மீதான மோசமான இந்தத் தாக்குதலை, தமிழர் நடுவத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், சட்டம் தன் பணியைச் செய்வதற்கு நாம் பொறுப்புடன் ஒத்துழைக்கவேண்டும் என்பதையும் வேண்டுகோளாக விடுகின்றோம்.
விடுதலைக்கான பயணத்தில், நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கள், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் சாவுகள், விபரிக்கமுடியாத அழிவுகளைத் தாங்கியபடி எமது விடுதலைப் போராட்டம் தன் இலக்கு நோக்கித் தொடர்கின்றது.
தடைகள், நெருக்கடிகள் வந்தபோதும், தூர நோக்கத்துடன், நிதானமும், பொறுப்புணர்வுடனும் சிந்தித்து, ஒற்றுமையாக எமது விடுதலைப் பயணத்தை மேற்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் – பிரான்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.