பக்கங்கள்

24 நவம்பர் 2011

காரைநகரில் உள்ள ஆலயங்களில் மணியோசை எழுப்ப தடை!

மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டதனால், காரைநகரில் உள்ள இந்து ஆலயம் எதிலும் மணி ஓசை எழுப்பக்கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் கடற்படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீர்கள் நினைவாக நவம்பர் 21ஆம் திகதியில் இருந்து மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வழமை நிகழ்வாக இருந்தது.
எனினும், போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதன் பின்னர் வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு உழுது தரைமட்டமாக்கப்பட்டன. அதனை அடுத்து வெளிப்படையாக மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்படுவது வடக்கு கிழக்கில் நின்றுபோனது. கடந்த மூன்று வருடங்களில் நவம்பர் இறுதி வாரத்தில் மாவீரர்கள் தொடர்பான எந்தவொரு நிகழ்வும் வெளிப்படையாக இடம்பெறுவதில்லை.
ஆனாலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இந்தக் காலப் பகுதியில் அதிக முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனுமே இருந்து வருகின்றனர். மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
“காரைநகரில் அடுத்துவரும் ஒரு வாரத்துக்கு கோயில்களில் மணியோசை எழுப்பக்கூடாது, தீபம் காட்டக் கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என இராணுவம் தடை விதித்துள்ளது. இதுவரை காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயம், பண்டத்தரிப்பான்குளம் சிறி சுந்தரேசன் பெருமாள் கோயில் ஆகியவற்றின் அர்ச்சகர்களுக்கு கடற்படையினர் இந்த அறிவித்தலை நேரில் வழங்கியுள்ளனர்.
இதனால் கடந்த மூன்று தினங்களாக நித்திய பூசைகளின்போது இந்தக் கோயில்களில் மணியோசை எழுப்பப்படுவதில்லை. தங்களுடைய அரசியல் காரணங்களுக்காக மக்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது ஏற்புடையதல்ல” என்றார் பிரதேச சபைத் தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.