கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும் ஒன்பது குழுக்களின் அங்கத்தவர்களாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தலைநகர தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியுள்ள வாக்குகளின் மூலமாகக் கிடைத்துள்ள அரசியல் பலத்தின் அடிப்படையில் இந்த பதவிகள் கிடைத்துள்ளன என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வேலணை வேணியன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் நிலையியற்குழுவின் தலைவராகவும் சுகாதார நிலையியற் குழுவின் அங்கத்தவராகவும் கடமையாற்றுவார். கே.ரி.குருசாமி வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி நிலையியற்குழுவின் தலைவராகவும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையியற் குழுவின் அங்கத்தவராகவும் கடமயாற்றுவார். எஸ்.குகவரதன் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நிலையியற்குழுவின் தலைவராகவும் வள நிர்வாகம் மற்றும் வீண்விரய தவிர்ப்பு நிலையியற்குழுவின் அங்கத்தவராகும் கடமையாற்றுவார். எஸ்.பாஸ்க்கரா ஓய்வூதியக் குழு, திண்மக் குப்பைக் கழிவுகள் நிர்வாகக்குழு ஆகிய இரண்டு நிலையியற் குழுக்களில் அங்கத்தவராகக் கடமையாற்றுவார். லோரன்ஸ் அன்ரன் பொர்னாண்டோ சமூக அபிவிருத்தி மற்றும் சமூக கலாசார ஒருங்கிணைப்புக் குழு, சட்டம் மற்றும் பொது ஒழுங்குக் குழு ஆகிய இரண்டு நிலையியற் குழுக்களில் அங்கத்தவராகக் கடமையாற்றுவார். அதேவேளையில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நல நிலையியற் குழுவின் தலைமைப் பதவியும் மாநகரசபை நிதி தொடர்பிலான நிலையியற் குழுவில் அங்கத்துவமும் மற்றும் ஏழைகளுக்கான நிதி ஆதார விசேட குழுவில் அங்கத்துவமும் தலைவர் மனோ கணேசனிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களின் பணிகள் பற்றிய விளக்கங்களும் இவற்றின் மூலமாக தலைநகர மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் தொடர்பிலும் அடுத்தவாரம் ஊடகங்கள் மூலமாக மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.