சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு இரகசிய கடிதம் ஒன்றை நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை துரிதமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரும் இந்த நான்கு பக்கக் கடிதத்தை மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் எழுதியிருந்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான சந்திப்பு, மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்த இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த இரகசியக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துச் செல்லுமேயானால், மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும் படியும், ஹிலாரியிடம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிபுணத்துவ உதவியை பெற்றுக் கொள்ளுமாறும், ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குமாறும், சிறிலங்காப் படைகளின் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகளை நிறுத்தும்படியும் - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் படுகொலை, திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனது, லலித்குமார், குகன் ஆகியோர் காணாமற்போனது உள்ளிட்ட தீர்வுகாணப்படாத கொலைகள், காணாமற்போதல்கள் குறித்து விசாரணை நடத்தும் படியும் சிறிலங்கா அரசக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் வொசிங்டன் பயணத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த இரகசியக் கடிதத்தின் உள்ளடக்கம் தற்போதே வெளியில் கசிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.