பக்கங்கள்

24 மே 2012

சிறிலங்கா மீது அடுத்த ‘குண்டு‘ தயார்!

நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது.
இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் செயற்படும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான செயலகம், ஆண்டுதோறும் நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில், சிறிலங்கா குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2011ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னரும் இணைந்து இன்று வெளியிடவுள்ளனர்.
வொசிங்டன் நேரப்படி, இன்று காலை 10.30 மணியளவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகச்சந்திப்பு அறையில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்திப்பதற்கு முன்னரே தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஹிலாரி கிளின்ரனும், மைக்கல் போஸ்னரும் சுமார் ஒரு மணிநேரம் செய்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர்,
“சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
எல்லா சிறிலங்கர்களுக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.