நாட்டில் மக்களுக்கான இறைமை மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனது நாட்குறிப்பில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி குறிப்பிடப்பட்டிருந்த வாசகத்துடன் ஹிருணிகா, ஜனாதிபதிக்கான தனது கடிதத்தினை ஆரம்பித்துள்ளார்.
குறித்த தினத்தினை (THE DAY I LOST MY SOUL) அதாவது “எனது உயிரினை இழந்த தினம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக தான் தந்தையை இழந்த ஒரு மகளாக, துன்பம், துயரம், அவமானம், அச்சுறுத்தல் என அனைத்தையும் எதிர்கொண்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான தருணங்களை தான் தொடர்ந்தும் அனுபவிப்பதாகவும், வாழ்நாளில் மிகவும் கஷ்டமான அனுபவங்களாக அவை அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அதேபோன்று ஏனைய பொறுப்புள்ள அதிகாரிகள் மக்களின் இறைமையை பயன்படுத்துவதாக ஹிருணிகாவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
செய்திகளில் எனது தந்தையின் இரத்தக்கறையைக் கண்டபோது என்னால் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போனது. எனக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது, சத்தமிட வேண்டும் போன்று இருந்தது. ஆனாலும் என்னால் வாய் பேச முடியவில்லை.
1980 களில் இருந்து எனது தந்தையின் அரசியல் பயணம் எவ்வாறானது என கொலன்னாவ பகுதி மக்கள் மாத்திரமன்றி, அனைத்து மக்களும் அறிவார்கள். 1979 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருந்த போது, இலங்கை மக்கள் வீட்டிற்கு வெளியே வருவதற்கே அச்சமடைந்த காலப்பகுதி அது.
அப்போது அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறங்கி நீலக்கொடியை கொலன்னாவையில் பறக்கவிட்ட ஒரே தலைவர் எனது தந்தை. கடந்த ஏழு மாதங்களாக பிரதான சந்தேகநபரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டுமென்றே நான் கூறி வருகிறேன்.
தற்போது இந்த வழக்கு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தரப்பு மற்றும் துமிந்த சில்வா உள்ளிட்ட நாட்டின் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தரப்பினரின் வழக்காக மாறியுள்ளது.
இந்தக் கடிதம் யாருடைய அழுத்தங்களுக்கும், தேவைகளுக்கும் அமைய எழுதப்பட்ட ஒன்று அல்ல. எனது உள்ளத்தில் பதிந்துள்ள அனைத்து விடயங்களையும் இந்தக் கடிதத்தில் சேர்த்துள்ளேன்.
ஜனாதிபதி அவர்களே தற்போது இது உங்களுக்கான சந்தர்ப்பம், இதனை படித்தவுடன் கிழித்துப்போடுவதா? கோபமடைந்து நடவடிக்கை எடுப்பதா? அல்லது இரண்டு, மூன்று தடவைகள் அல்லது 10 தடவைகள் சிந்தித்து நியாயத்தை வழங்குவதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவிற்கு நியாயம் வழங்கப்படுமாயின், இந்த நாட்டில் சட்டத்துக்கு முரணான விதத்தில் செயற்படுகின்ற நபர்களுக்கு அதுவொரு முன்னுதாரணமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.