பக்கங்கள்

08 மே 2012

நல்லூரில் பட்டப்பகலில் அடிதடி! கொள்ளை!


நல்லூர் பின் வீதியில் உள்ள பாரதியார் சிலை சந்திப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகலில் நுழைந்த ரவுடிகள் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருள்களையும் அடித்து நொருக்கி விட்டு தங்கச் சங்கிலி ஒன்றையும் அறுத்துச் சென்றுள்ளனர்.இதன் போது காயமடைந்த வீரையா ஜெகசோதி (வயது 56) என்பவர் தலையில் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வீட்டார்  தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை எமது வீட்டு நாய் குறுக்கே பாய்ந்ததால் தமது மோட்டார் சைக்கிள் சேதமடைந்து விட்டதாகவும், எனவே அதனை திருத்தித் தருமாறும் இருவர் எங்கள் வீட்டில் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றனர்.
நாங்களும் அதன்படி மோட்டார் சைக்கிளைத் திருத்தி வைத்திருந்தோம். இன்று காலை (நேற்று) மீண்டும் வந்த அவர்கள் தமது மோட்டார் சைக்கிள் சரிவரத் திருத்தப்படவில்லை என்று கூறி இரண்டரை லட்சம் ரூபா பணம் தரவேண்டும் அல்லது நாயையும் வீட்டில் உள்ளவர்களையும் வெட்டுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
சொன்னபடியே மாலையில் கொட்டன்கள், பொல்லுகளுடன் வந்த ரவுடிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு வீட்டின் யன்னல் கண்ணாடிகள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோ, வீட்டுக்குள் தொங்க விடப்பட்டிருந்த படங்கள் என்பவற்றை அடித்து நொருக்கி எங்களையும் கடுமையாகத் தாக்கினர் என்று தெரிவித்தனர்.
 அத்தோடு வீட்டில் இருந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நேற்றிரவு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
நாய் குறுக்கே பாய்ந்ததில் சேதமடைந்ததாக குறிப்பிடப்படும் மோட்டார் சைக்கிளை (EP VN 0125) நேற்றிரவு அந்த ரவுடிகள் உருட்டிச் சென்று அயலில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை அங்கு வந்த பொலிஸார் எடுத்துச்சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.