பக்கங்கள்

12 மே 2012

இளைஞர் மீது சூடு நடத்திய சிப்பாய்களை விசாரிக்க உத்தரவு!


விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்திவரும் காவற்துறையினர், சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவத்தினர் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றிடம் நேற்று அனுமதி கோரினர்.
அதற்கு அனுமதி வழங்கிய கிளிநொச்சி நீதிமன்றம், இராணுவத்தினர் மூவரதும் துப்பாக்கிகளையும் காவற்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அந்தப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த அன்றே விசாரணை நடத்தச் சென்ற சமயம், இது இராணுவத்தினர் தொடர்புபட்டது என்ற காரணத்தால் இராணுவ நீதிமன்றமே விசாரணை செய்யும் என்று கூறிய இராணுவ அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தத் தமக்கு அனுமதி மறுத்துவிட்டார் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதனை அடுத்தே, சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பகுதியில் இருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவக் கோப்ரலையும் மற்றும் இரு சிப்பாய்களையும் கைது செய்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை காவற்துறையினர் கோரினர்
இதேவேளை, காட்டுக்குள்ளேயே சம்பவம் இடம்பெற்றதாகவும் இராணுவத்தினரே தம்மைச் சுட்டார்கள் என்றும் சம்பவத்தில் தப்பிய இளைஞர் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலேயே காவற்துறையினர், தற்போது இராணுவத்தினரிடம் விசாரணை நடத்த நீதிமன்றின் அனுமதியை நாடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான எஸ்.கிருஷ்ணகுமார் அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பன்றி வேட்டைக்கு அல்லது இருப்பு தேட இந்த இளைஞர்கள் சென்ற சமயத்தில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று அயலவர்கள் கூறியுள்ளனர். எனினும் என்ன காரணத்தால் இளைஞர்கள் சுடப்பட்டார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.