சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன்.
அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க
முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில்
நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று
ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில்
ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.
ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா
தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என
காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.
தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு
தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.
தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக
தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை.
சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு
எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில்
ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை
வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில்
ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த
கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார்.
தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.
அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார்.
இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின்
வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார்.
இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும்
எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால்
நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற
விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என
அரியநேத்திரன் சொன்னார்.
நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான்
எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து
கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது
குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன்
இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.
கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த
பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள்
அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.
நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது
இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான்
சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ்
மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை
ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு
இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை
தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு
அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் தெரிவித்தார்.
இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து
நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ்
பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை
என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு
ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என
சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.
விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது
குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா
சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என
சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும்,
இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர்
தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள்
சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நன்றி – தினக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.