மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற தமது வகுப்பு
பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள
அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
கூறப்படுகையில்:
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பல்கலைக்கழத்திற்கு சென்று கொண்டிருந்த
வேளையில், கலைப்பீட 4ம் வருட மாணவனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்
2012ம் ஆண்டுக்கான செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டவருமான பரமலிங்கம் தர்சானந்,
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால், அதிக சனநடமாட்டம் கூடிய யாழ்ப்பாணம் கலட்டி
சந்தியில் உள்ள இராணுவ காவலரன் அருகில் வைத்து கூரிய மற்றும் இரும்பு ஆயுதங்களால்
கடுமையாக தலைப்பகுதியில் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் யாழ் போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான
தாக்குதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த
வருடத்திற்கான யாழ். பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம்
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தொடர்ச்சியான தாக்குதல்களால், மாணவர்கள்
உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கல்விச் செயற்பாடுகளில்
சுமூகமான முறையில் ஈடுபடமுடியாமல் போகிகின்ற நிலை தோன்றியுள்ளது.
கடந்த காலத்தில் மேற்படி மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிமணியம் தவபாலசிங்கம்
தாக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக
யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன்
யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நடாத்திய கலந்தரையாடல் கூட்டத்தின் போது, மாணவர்கள்
மீதான தாக்குதல்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாதவாறு பாதுகாப்பு வழங்கப்படும்
என்கின்ற உத்தரவாதத்தினை மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது என்பது தமிழ்க் கல்விச்
சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விரக்தியையும்
ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க அண்மைக் காலங்களில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளும்
சூழலிலும் இராணுவ புலனாய்வாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் அதிகரித்திருக்கின்றது.
இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்திருந்தும் அதனை தடுத்து நிறுத்தவதற்கான
எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு மேற்படி மாணவர் மீதான
தாக்குதல்கள் குறித்து அக்கறை கொள்ளாது அசமந்தப் போக்குடன் இருப்பதும் மாணவர்கள்
மத்தியில் கடுமையான கொந்தளிப்பை தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் காரணமாக மாணவர் மீதான
பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானதொன்றாகவே மாறியுள்ளது.
எனவே யாழ். பல்கலைக்கழக மாணவர் மீதான இத்தகைய கொலை மிரட்டல்கள், கொலை முயற்சிகள்
மற்றும் தாக்குதல்கள் போன்றவற்றை மாணவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு தொடர்ச்சியான
முறையில் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நிறுத்தக் கோரியும்
மாணவர்களுக்குரிய பாதுகாப்பினை வலியுறுத்தியும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும்
முகமாகவும் மாணவர்கள் காலவரையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மதியத்துடன் தமது விரிவுரைகளை பகிஸ்கரித்துள்ள
மாணவர்கள் அன்றைய தினம் துணைவேந்தரது அலுவலகத்தை சுற்றி வளைத்ததுடன் அவரிற்கு
எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.துணைவேந்தர் ஆளுந்தரப்பினது கட்சி பிரதிநிதி
போன்று செயற்படுவதாகும் அரச ஆதரவு தமிழ் கட்சியிற்கு பயந்து செயற்படுவதாகவும்
மாணவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.