பக்கங்கள்

27 மே 2012

கைதிகளின் விடுதலை வேண்டி போராட்டம்!

சிறைக்கூடங்களில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி நாளை மறுநாள் செவ்வாய்கிழமை 29ம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஒன்று கூடும்படி, கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக நிறுவனங்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட நவசமசமாஜ கட்சி, முன்னிலை சோஷலிச கட்சி, ஐக்கிய சோஷலிச கட்சி ஆகிய கட்சிகளினால் நடத்தப்படும் சாத்வீக ஆர்ப்பாட்டம் தொடர்பில், மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் விடுதலை என்பவை அப்பாவி தமிழ் பாமர மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மற்றும் மனித நேய பிரச்சினைகள் ஆகும். அரசியல் தீர்வு வரும்வரை மனித உரிமைகள் மீறப்படுவதை நாம் சகித்துக்கொண்டு காத்திருக்க முடியாது. அரசியல் தீர்வுக்கான பேச்சவார்த்தைக்கான களம்கூட ஏற்படுத்தப்படாதபோது, தமது உறவுகளை பிரிந்து வாழும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் கண்ணீர் விடாதீர்கள் என நாம் சொல்ல முடியாது. அரசாங்கம் தரும் போலி வாக்குறுதிகளை நம்பி நாம் பதிலுக்கு மக்களுக்கு வாக்குறுதி அளிக்க முடியாது. எமது மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை இன்று தென்னிலங்கை முற்போக்கு அணியினரும் ஏற்றுகொண்டு வருவது நல்ல அறிகுறியாகும். இந்நிலையில் எமது கூட்டு ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடாகி இருக்கும் இந்த சாத்வீக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளையும், சமூக, மத நிறுவனங்களையும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறேன். கைதிகளின், காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலமே நாட்டினதும், சர்வதேசத்தினதும் மனசாட்சியை எம்மால் தட்டி எழுப்ப முடியும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.