பக்கங்கள்

19 மே 2012

இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்!


இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரம் தொடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்ரன், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு நினைவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புக்களின் போது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பற்றி வலியுறுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை சந்திப்பதற்கு முன்னதாக சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளுக்காக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சுயாதீனமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணைகளின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை வழங்க முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.