கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் தமிழ் பெண் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும் அப்பெண் இராணுவ சீருடை அணிந்த சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணின் உடலில் காணப்படும் காயம் மிருகங்களின் தாக்குதலில் ஏற்பட்ட காயம்போல் காணப்படவில்லையென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறும் உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர் சென்றவேளையில் இராணுவ சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை தாம் கண்டதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும் வன இலாகா அதிகாரிகளும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்தில் வைத்து எரிக்க முற்பட்டதாகவும், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்பிலுவில் வீசி வீதியை சேர்ந்த 33வயதுடைய கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்ற இந்த பெண் திருக்கோவில் கல்வி வலயத்தில் எழுதுவிளைஞராக கடமையாற்றி வருகிறார்.
தமது உறவினர்களுடன் கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போதே நேற்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.