பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஈழத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி மாரடைப்பால் காலமான செய்து கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தில்லி சவர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.
இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.