பக்கங்கள்

06 ஜூலை 2011

அவுஸ்திரேலிய அரசிடம் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்கள்.

ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம்.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து , சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை மூடி மறைக்கும் பொருட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக்கேள்வி எழுப்பும் சர்வதேச தரப்புக்கள் அனைத்துமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை,சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி, தம்மைக்கேள்வி கேட்பவர்கள் அனைவருமே எதிரிகள் என்ற எழுதாத கோட்பாட்டினைச்சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைச் செய்துவருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் ,போர்க்குற்ற அரசான மகிந்த ராஜபக்ச தரப்பினரின் உண்மையான முகத்தினை, சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும் ஆதாரமான "சனல் -4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" பெட்டக நிகழ்ச்சி, உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அந்தப்பெட்டக நிகழ்ச்சியினை ஒஸ்ரேலியாவின் முக்கியமான முன்னணி ஊடகங்களில் ஒன்றான ஏ.பி.ஸி. தொலைக்காட்சி மீள் ஒளிபரப்புச் செய்ததன் மூலம் ,அது தனது துணிச்சலையும் உறுதித்தன்மையையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் பக்கச்சார்பற்ற தனது ஊடக தர்மத்தினையும் நிலைநாட்டியிருக்கிறது.
மீள் ஒளிபரப்புச் செய்த இந்த பெட்டக நிகழ்ச்சியில் எந்த ஒரு மாற்றத்தையோ அல்லது இடைச்செருகல்களையோ மேற்கொள்ளாமல் மூலக்காணொலியை அப்படியே ஒளிபரப்பியதன் மூலம் , ஊடகவியல் என்பது எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் உட்பட்டதல்ல என்பதையும் ,சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களுக்கு கட்டுப்படாத ஒன்று என்பதையும் , இன மத பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் வெளிப்படையாக நிரூபித்துள்ளது. ஊடக நன்நெறியின் மனச்சாட்சியை அரசியல் அழுத்தங்களால் அடிபணியவைக்கமுடியாது என்பதனையும் அது பதிவு செய்திருக்கிறது.
நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு இப்போது அத்தியாவசியமாக உள்ளது என்ற யதார்த்தத்தையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
ஜனநாயக பண்புகளையும் ,மனிதநேய விழுமியங்களையும் உயர்நிலையில் பேணிப்பாதுகாக்கும் ஏ.பி.ஸி. போன்ற ஊடகங்களினால் , வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சினையின் உண்மைத்தன்மையினை ஆத்மார்த்தமாக அணுகி, தாயக தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் வேட்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டினை ஒஸ்ரேலியா அரசு எடுக்கவேண்டும் எனவும் -
நீதியை நாடிநிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ,சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அரசியல் பொருளாதார அழுத்தங்களை ஒஸ்ரேலிய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று ஒஸ்ரேலிய தமிழ் மக்கள் சார்பில் ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வேண்டிக்கொள்கிறது.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.