பக்கங்கள்

19 ஜூலை 2011

தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் மீது ஈ.பி.டி.பியினர் தாக்குதல்.

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசம் மணியங்குள விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை ஈ.பி.டி.பி. கட்சியினரே தாக்கினர் என காவற்துறை மற்றும் கபே அமைப்பு என்பவற்றிடம் முறையிடப்பட்டுள்ளது.
செல்லத்துரை தயாகரன் என்பவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தாக்குதலுக்குள்ளானார். சம்பவ தினத்தன்று இவர் தனது 12 வயதான மகனுடன் உறவினர் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் இவரது மகனையும் முள் வேலிக்குள் தூக்கிஎறிந்ததால் அவரும் காயமடைந்துள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த சுரேஸ் என்பவரும் அவரது சகாக்களும் தம்மை இடைமறித்து முகத்தில் தாக்கினர் எனவும் இதனால் கீழே விழுந்த தம்மை அவர்கள் கால்களால் பலமாகத் மிதித்தனர் எனவும் தயாகரன் தெரிவித்தார்.
அக்கராயன் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்ட தயாகரன் அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அங்கு தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகிறார்.தயாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளரான நடராசா டெனிஸ் ராசாவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சுரேஸ் ஈ.பி.டி.பிக்கு ஆதரவானவர்.
சில நாள்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வந்து சுரேஷ், தன்னைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என மிரட்டினார் என்றும் மீறிப் பிரசாரம் செய்தால் நடப்பது வேறு என்று பய முறுத்தினார் எனவும் தயாகரனும் வேட்பாளருமான டெனிஸ்ராசாவும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.