வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஓரணியில் திரண்டு தங்களின் இலட்சியத்தை, இலக்கை வெளிப்படுத்திய பின்னர் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டன.
அந்த நிலைப்பாட்டை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை அளிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தவேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை மாலை நாவற்சோலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அரியநேத்திரன் மேலும் பேசுகையில்;
2009 இல் இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவின் பின்னர் தமிழர்களுக்கு இனி என்ன பிரச்சினை இருக்கின்றது என்று அரசுத்தலைமை கேட்டது.தமிழருக்கு பிரச்சினைகள் உள்ளன.
அவை தீர்க்கப்பட்டாகவேண்டுமென்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் 2010 பாராளுமன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலிலும் மீண்டும் தலைநிமிர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பின்னால் ஓரணியில் திரண்டு நின்று குரல் கொடுத்தனர்.
89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விதவைகளாகக்கப்பட்டனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முடமாக்கப்பட்டனர், அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவ்வாறான தியாகங்கள் எல்லாம் வீணாகப்போய்விடாது. தமிழ் மக்கள் மீண்டும் ஓரணியில் திரண்டு நின்றால் அத்தியாகங்களுக்கு சரியான விடிவு கிட்டும்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தவேண்டுமென்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.