நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற குடாநாட்டு வேட்பாளர்களுக்கு தலா 1600 முதல் 2000 ரூபா வரை மட்டுமே கட்சியினால் வழங்கப்பட்டிருப்பதாக வேட்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் துண்டுபிரசுரங்கள், பரப்புரைக் கூட்டங்கள் உட்பட்ட தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி உதவி தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனை அடுத்து ஒவ்வொரு சபைகளின் வேட்பாளர்களுக்கும் ஐம்பதனாயிரம் ரூபா மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சபைகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய ஐம்பதாயிரம் ரூபாக்களும் பகிரப்பட்ட போது ஒவ்வொருவருக்கும் 1600 ரூபாவே கிடைக்கப் பெற்றதாகவும், வேட்பாளர்கள் குறைந்த சபைகளுக்கு 2000 ரூபா கிடைத்ததாகவும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் துண்டுப்பிரசுரம் கூட அச்சிட முடியாத குறித்த பணத்தின் மூலம் அரச இயந்திரம் முழுமையாக ஈடுபட்டுள்ள தேர்தல் பரப்புரையினை எவ்வாறு முறியடிப்பது என்று வேட்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி, பொருளாதார அமைச்சர் உட்பட்ட அதியுயர் பீடத்தினர் யாழ்.குடாநாட்டில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.