கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தாயொருவர் புலியிடம் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யால காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற இளம் தாயான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.
சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.
பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.