இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் விசாரணை நடத்தப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.