பக்கங்கள்

02 ஜூலை 2011

இந்தியாவும்,அமெரிக்காவும் இணைந்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளன. எனினும், அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.
தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையை அரசு 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இந்தக் குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கும் அரசு தீர்மானித் துள்ளது.அரசிடம் அரசியல் தீர்வு ஒன்று இல்லாததன் காரணமாகவே அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது.
இதனை மேலும் இழுத்தடிக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நியமிக்க முனைகிறது என அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், அரசிடம் உண்மையாகவே அரசியல் தீர்வு உள்ளதா, அப்படி இருந்தால் ஏன் காலத்தை இழுத்தடிக்கின்றது, இதனால் அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுமா என ஊடகம் ஒன்று கேட்டபோதே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறே அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை வந்த ரொபட் ஓ பிளேக்கிடம் அரசு இது விடயம் தொடர்பில் இணங்கியது.
இந்தியாவும் இதனையே கூறியுள்ளது.ஆனால், அரசு தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என எவரும் இல்லை எனக் கூறுகின்றது. அதனாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனூடாகத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றது.ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே தீர்மானிக்கும். வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை தங்களின் வாக்குரிமை மூலம் நிரூபித்துள்ளனர்.
உண்மையாகவே தீர்வு இருந்தால் கூட்டமைப்பினருடன் பேசி வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசு அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.அரசு அப்படியே காலத்தை இழுத்தடிக்க முனையுமானால் அமெரிக்க, இந்திய அரசுகள் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஏனெனில், இந்தியாவும், அமெரிக்காவுமே மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியதுடன், யுத்தத்தை முடிப்பதற்கு பெருமளவு பங்களித்தன. எனவே, இலங்கை விடயத்தில் கட்டாயம் அவர்கள் தலையிட வேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில், இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆயுதம் வழங்கிய நாடுகளும் பொறுப்புக் கூறவேண்டும்.
தொடர்ந்தும் அரசு இனப்பிரச்சினை தொடர்பில் மௌனம் காக்குமானால், சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.இலங்கை அரசை மகிந்த என்ற பொம்மை ஒன்று ஆட்சி செய்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக அரசு பக்கம் உள்ள இனவாதத்தைத் தூண்டும் அமைச்சர்களின் தாளத்துக்கு மகிந்த என்ற பொம்மை ஆடுகின்றது.அவர்களின் அழுத்தத்தாலேயே கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, தீர்வை வழங்க அரசு தயங்குகின்றது என விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.